கதை வசனம்,இயக்கம் :வைகறை பாலன் ,இசை:முத்தமிழ் ,ஒளிப்பதிவு பாபு குமார்.தயாரிப்பு :கே எல் .புரொடக்சன் .
கரிகாலன்,ரிஷா ஹரிதாஸ்,நளினிகாந்த் ,பசுபதிராஜ்,ஈஸ்வர் தியாகராஜன் ,துரை சுந்தரம் ,சமுத்திர சீனி ,சக்திவேல் ,நாராயணசாமி,
*************
நம்முடைய வாழ்க்கையில் கடந்து கொண்டிருக்கிற கேவலம் ( இதுவே கடுமையான சொல்தான்.) பெற்றோரைப் புறக்கணிப்பதுதான்.
பிள்ளைகளை வாழவைக்கவேண்டும் என்பதற்காக தாய் தந்தை படுகிற கஷ்டங்களை பார்த்தபடியே வளர்கிற பிள்ளைகள், அவர்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பின்னர் உதாசீனப்படுத்துவதும் ,உதறித் தள்ளுவதும், முதியோர் இல்லங்களில் அவர்களை முடக்கிப்போடுவதும் நகர வாழ்க்கையில் சாதாரணம்.
இதுவே அதிகமாக வளர்ச்சி பெறாத தேனி அருகில் மேகமலை அடிவாரத்தில் உள்ள ஒரு அனாதையைப் போல கிடக்கும் கிராமத்தில் நடக்கிறது என்றால்…. அதுதான் சியான்கள் கதையின் அடிநாதம்.
கிராமிய மணம் கதையில் !
உணர்வுகளின் பிரதிபலிப்பு சற்றும் குறையாமல் அந்த முதியவர்களின் உழைப்பில்.!
நமக்குத் தெரிந்த வரை நளினிகாந்த் தவிர மற்றவர்கள் புதிய முகங்களே.!
தயாரிப்பாளரே கதையின் நாயகன் கரிகாலன் .மெடிக்கல் ஷாப் அனுபவம் அவரை டாக்டராக கொண்டாடுகிறது அந்த பின்தங்கிய கிராமம்.
சடையன் (நளினிகாந்த்)ஒண்டிக்கட்டை ( பசுபதிராஜ் )மிலிட்டரி (ஈஸ்வர் தியாகராஜன்.) செவ்வால (துரை சுந்தரம் ) மணியாட்டி (சமுத்திர சீனி) ரஷ்யா (சக்திவேல் ) செவனாண்டி ( நாராயணசாமி.) ஆகிய 7 சியான்களில் எஞ்சியது ஐவர் மட்டுமே !
எழுவரில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் .பட்டினியாக போட்டாள் மருமகள். நாய் தின்கிறது அந்த பழைய சோத்தை! பசி தாங்காமல் ராத்திரியில் எழுந்த கிழவன் தட்டுத்தடுமாறி அவள் மறைத்திருந்த கறிக்குழம்பில் கிடந்த ஒரு துண்டினை எடுத்து வாயில் வைத்த போது புண்ணியவதி மருமகள் பார்த்து விடுகிறாள் .
கன்னத்தில் பலமாக விழுகிறது அறை ! நாமே கலங்கிவிடுகிறோம். மானஸ்தன் கிழவன் தொங்கிவிடுகிறான்.மற்றொரு மானஸ்தரின் கதையும் ஓரளவு இப்படித்தான் .சொத்துக்கு ஆசைப்பட்டு மரணம் நடந்துவிடுகிறது
இது ஒரு பதம்தான்! ஆனால் வெறுப்பின் ஒரே பக்கத்தை மட்டும் காட்டாமல் அன்பு பாசம் ஆகியவையும் படத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன .உதாரணம் தண்டட்டி தொலைந்த மர்மம்.
இப்படியாக முற்பாதி பிற்பாதி இரண்டுமே உணர்வுக்குவியலாக இருக்கிறது. ஆனால் சற்றே நீளம். முயன்றால் குறைக்கமுடியும்.!
கரிகாலனாக தயாரிப்பாளர் நடித்திருக்கிறார் .மிகவும் இயல்பான கிராமிய முகம். நானே தயாரிப்பாளர் என்கிற முதலாளித்துவம் இல்லாமல் கதையுடன் ஒன்றி காதல் காட்சிகளில் கூட மில்லி அளவு நெருக்கம் காட்டாமல் கதையின் போக்கில் சென்றிருக்கிறார்.நாயகியாக ரிஷா ஹரிதாஸ் அளவோடு நடித்து வாழ்ந்து இருக்கிறார். ( கல்யாணமாமே ! வாழ்த்துகள் !)
நளினிகாந்த் .ஒரு காலத்து போட்டி ரஜினிகாந்த் என கொம்பு சீவப்பட்டவர். சடையனாக விமானத்தில் பறக்கும் ஆசைப்படுகிற சீயான் .அவருக்கு நல்ல நடிகர் என்கிற சிறப்பினை வழங்கியிருக்கிற படம். சியான்களின் ஆசைகளை சொல்கிற காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
“ஒரு வெள்ளைக்காரியுடன் அப்படியும் இப்படியுமா இருக்கனும் “என்கிற ஆசை ,அதை சொல்கிற பாங்கு ..
வைகறைபாலனுக்கும் இசை அமைப்பாளர் முத்தமிழுக்கும் வாழ்த்துகள்.
வருட கடைசியில் ,கொரானா கொள்ளை நோய் முடிவில் மனநிறைவான படம்.!