ஐதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு குழுவினருக்கு திடீரென கொரோனா தொற்று பரவியதால் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்வுக்கு பின் சமீபத்தில் ஐ தராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.
இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
டான்ஸ் மாஸ்டர் பிருந்தா மேற்பார்வையில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற பாடல் காட்சியை இயக்குனர் சிறுத்தை சிவா படமாக்கி வந்தார்..
படப்பிடிப்பு தளத்தில் தினமும் காலை வழக்கமாக எடுக்கப்படும் கரோனா பரிசோதனையில் நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ரஜினி, நயன்தாரா ஆகியோர் தங்கியிருந்த ராமோஜிராவ் படப்பிடிப்பு வளாகத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்களை உடனடியாக தனிமைப்படுத்தி கொண்டனர் .
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மகளுடன் தனி விமானத்தில் இன்று மாலை அல்லது நாளை காலை சென்னை திரும்புகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் நாளைக்கு ரஜினிக்கு மறுபடியும் கொரானா சோதனை நடத்தப்படும் என்பதால் இன்று அவரால் சென்னைக்கு திரும்ப இயலாது .மேலும் லேசான காய்ச்சல் இருப்பதாகவும் ஆதாரமற்ற செய்தி உலவுகிறது.
கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்த போதிலும் எப்படி கரோனா தொற்று பரவியது. படக்குழுவினர் யாரேனும் படப்பிடிப்பு வளாகத்தை விட்டு வெளியே சென்றுவிட்டு, மீண்டும் படப்பிடிப்புக்குள் வந்தார்களா என்று படக்குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.