‘தி இன்டச்சபிள்ஸ்’ என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி, ‘தோழா’வை இயக்கியிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வம்சி. .பாரிஸ் பாராக்ளைடிங் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு, குவாட்ரி பிளேஜியாவால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழ் செயல்படாமல், வாழ்க்கைச் சக்கரத்தை, சக்கர நாற்காலியிலேயே கடத்தும் பல கோடிகளுக்கு அதிபதியான நாகார்ஜூனாவுக்கு, ‘கேர் டேக்கர்’ வேலைக்கு தேர்வாகிறார் சிறு,சிறு திருட்டுகளில் ஜெயிலுக்கு போய்வரும் கார்த்தி.
எல்லாரும் தம்மை பார்க்கும் பரிதாபப் பார்வை பிடிக்காத நாகார்ஜூனாவுக்கு, ‘அண்ணா.. அண்ணா’ என்றழைத்துத் தன்னை பார்த்துக்கொள்ளும் கார்த்தியின் கலகலப்பான சுபாவம் பிடித்துப்போக அவரையே காப்பாளராக நியமிக்கிறார் பதிலுக்கு, தன் அம்மா தன்னைப் புரிந்துகொள்வதில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் கார்த்திக்கு, ‘நான் உன் அண்ணன்தானே?’ என்று உதவுகிறார் நாகார்ஜூனா.
ஒருகட்டத்தில் தன்னைத் தொலைத்துவிட்டோம் என்று உணரும் நாகார்ஜூனாவுக்கு, அவரது இயல்பை மீட்டெடுக்க பாரிஸ் அழைத்துச் செல்கிறார் கார்த்தி. திரும்ப வந்ததும், ‘நீ இங்க இயல்பா இல்லை. உன் குடும்பத்துக்கே போ’ என கார்த்தியை, அவர் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார் நாகார்ஜுனா. பிரிந்தபின் தோழர்கள் என்ன ஆகிறார்கள், நாகார்ஜுனாவை யார் பார்த்துக் கொள்கிறார் என்பதையெல்லாம் உணர்வுகளைக் கொட்டி, அதே சமயம் ஜாலியாய் சொல்ல முயல்கிற படம்தான் தோழா. நாகார்ஜுனாவின் உதவியாளர் கதா பாத்திரத்தில் தமன்னா கச்சிதம். லாயராக வரும் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.அருமையான தேர்வு! கார்த்திக்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான நகைச்சுவைக் காட்சிகள் படத்திற்கு வேகம் கூட்டுகிறது. ஜெயசுதா, விவேக் வந்து போகிறார்கள்.. அப்பாவி சமையல்காரராக வரும் மறைந்த நடிகை கல்பனா நெஞ்சில் பதிகிறார். .ராஜு முருகன், முருகேஷ் பாபுவின் வசனங்கள் பல இடங்களில் பளிச்! நாகர்ஜூனா பல காட்சிகளில் முகபாவனைகளிலேயே பேசி விடுகிறார்.
கார்த்தி, நாகார்ஜுனாவுக்கு இடை யிலான உறவில் காட்சிகளை இயக்குனர் இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம் இதனால் சில நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடப்பதுபோன்ற நமக்கு உணர்வு ஏற்படு வதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். படத் தொகுப்பாளர் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருந்தால் படத்தின் வேகம் இன்னும் கூடியிருக்கும் எனினும், இயக்குனர் வம்சி பெய்டிபல்லி தமிழ்,தெலுங்கு ரசிகர்களின் என்ன ஓட்டங்களை புரிந்து கொண்டு,அதை ‘தோழா’வில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். 3/5.