கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி ஐதராபாத்திலிருந்து திரும்பி வந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் இன்று காலை காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது குறித்த புகைப்படங்களை நடிகர் சரத்குமார் தனது முக நூலில் வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது,”இன்று காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மனைவி ராதிகா மற்றும் நிர்வாகிகளுடன் சென்று சிறப்பு தரிசனம் செய்தேன். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சொந்த கிராமம் சிராவயலில் குலதெய்வம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தற்போது செல்ல இயலாத காரணத்தால், காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்தேன்.
இத்தருணத்தில் என் உடலநலம் குணமடைய உதவிய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், ஹைதரபாத் அப்போலோவில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் எனது நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மேலும், அனைத்து மாவட்டங்களிலுள்ள திருக்கோவில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், மசூதிகளிலும் எனக்காக சர்வமத பிரார்த்தனை செய்த அன்பார்ந்த ரசிகர்களுக்கும், சமத்துவ சொந்தங்களுக்கும் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவிக்கிறேன்.
2021 புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையவும், அனைத்து வழிகளிலும் முன்பை விட கடுமையான உழைப்பு, விடாமுயற்சியின் மூலம் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணவும், வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திடவும் எனக்காக பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்காக காமாட்சி அம்மனிடம் நான் பிரார்த்தனை செய்து வந்தேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.