தமிழர்க்கு தாய் மொழி தமிழ்.
ஆனால் அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழில் கேள்விகள் கேட்கப்படாது ,ஆங்கிலம் ,இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கிறது.
அஞ்சல் துறையில் கணக்காளர் பதவிக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்கிற தமிழர்களுக்கு தாய் மொழியில் கேள்விகள் கேட்கப்படாது என்பதால் கடுமையான வெறுப்பில் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இது இந்தி மொழித் திணிப்பு என்பதைத் தவிர வேறு என்ன ?
தமிழர்கள் தங்கள் தாய் மொழியை புறக்கணிக்கவேண்டிய கட்டாயத்தை பாஜக அரசினர் ஏற்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.
தமிழ் மொழி மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது, தற்போது மிகப்பெரிய சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக மத்திய அரசு தேர்வுகளான ஜேஇஇ தேர்வில் கூட தமிழில் எழுத அனுமதி வழங்கியுள்ள நிலையில், அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதால் தேர்வர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதற்கு கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
“ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் தேர்வெழுத வேண்டுமா?;
சினத்தோடு கண்டிக்கிறோம்.
மேலும் ஆங்கிலம், இந்தியில் முகவரி எழுதினால் தான் அஞ்சல் சென்று சேருமா?
அஞ்சல்துறை தேர்வுக்கு தமிழில் தயாராகிக் கொண்டிருந்த
ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது “ என பதிவு செய்திருக்கிறது.