கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு திரையரங்குகளுக்கு நூறு சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இதற்கு மருத்துவர்கள், சமூக நல ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இவ்விவகாரத்தில் ஏற்கனவே மத்திய அரசு இந்த 100 சதவீத அரசாணைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றங்களும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து,அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும், மேலும், கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான கலைப்புலி எஸ் தாணு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,” திரையரங்குகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் வரும் பொங்கல் விடுமுறை நாட்களிலாவது 100சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே திரையுலகமும், திரையரங்கு உரிமையாளர்களும் நலிவுற்று இருக்கும் சூழலில் 100 சதவீத இருக்கை அனுமதி என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்