மெல்லத் தமிழ் இனி சாகும்’
உண்மைதான்!
”தமிழன் தனது இன,மான, மொழி உணர்வினை தானே அழித்துக் கொண்டான் !ஆண்ட இனம் அடிமையாக மாறியதற்கு அவனே காரணமாகினான் ” என்று எதிர்வரும் காலத்தில் வரலாறு சொல்லுமானால்…..?
சொல்லுமானால் என்ன ,சொல்லும்!
செவிட்டில் அறைந்து சொல்லும்.
தமிழனது பாரம்பரிய அடையாளங்களை பதவிக்காக ,பணத்துக்காக ,அதிகார மையத்துக்காக மாற்றிக்கொண்டான்!
இன விடுதலைக்காக போராடிய தமிழர்களை ஒழிப்பதற்கு ‘தமிழனே’ துணை போனான் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.
தமிழனது புத்தாண்டு ‘திருவள்ளுவர் ஆண்டு’என்றே அழைக்கப்படும் ,தைத் திங்கள் தான் ஆண்டின் தொடக்கம் என்று தமிழறிஞர்கள் சொல்லியிருந்தாலும் தமிழ் விரோத
சக்திகள் சித்திரையை கொண்டாடிவிட்டன! தைத்திங்களே தமிழர் புத்தாண்டு என்பதால் தமிழ்நாட்டவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை ‘சினிமா முரசம்’ பதிவு செய்கிறது.
சித்திரையை கொண்டாடியவர்களும் தமிழர்கள்தான்
இதில் வருத்தமோ ,கவலையோ இல்லை
.இனத்தின்அடையாளங்கள் அழிவதற்கு நம்மவர்களும் துணை போகிறார்களே என்கிற கோபம் தான் அதிகமாகிறது.
சார்வரி என்கிற பெயரில் தமிழ்ப்புத்தாண்டினை சொல்கிறார்கள்.
இந்த சார்வரி எப்படி இருக்குமாம்?சார்வரி என்கிற வட சொல்லுக்கு இரவு என்பது பெயர்
இடைக்காடர் என்கிற சித்தர் சொல்வதை கேளுங்கள்.!!
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு.
அதாவது சார்வரி ஆண்டில், தீராத நோயால் அவதிப்படுவர், மழை குறைவாக இருக்கும் என்பதால், பூமியில் விளைச்சல் குறையும் சோகம் உண்டு. மக்கள் தாமாக வரக்கூடிய மரணமில்லாமல் சாவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.