கடந்த சில வருடங்களுக்கு முன்பு எதிர்பாராதவகையில் நடந்த சிறிய விபத்து ஒன்றில், நடிகர் கமல்ஹாசனின் வலது காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனிடையே கட்சிப் பணி, மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து கமல் கவனம் செலுத்தி வந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது காலில் தொடர்ந்து வலி இருந்து வருவதாகவும், இதனால் மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்நிலையில் கடந்த 18ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு, மறுநாள் நல்ல படியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
அன்றைய தினம் கமலின் மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் ஒன்றாக வெளியிட்டிருந்த கூட்டு அறிக்கையில், அப்பாவிற்கு நல்ல படியாக காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், மருத்துவர்கள் குழு, மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் இருந்தனர்.
மேலும் நான்கைந்து நாட்களில் அப்பா வீடு திரும்புவார் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து அவர் நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.இதையடுத்து கமல்ஹாசன் தனது வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.