தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கிற கங்கனா ரனாவத் மீது பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இப்போதெல்லாம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது இவரது வாடிக்கையாகி விட்டது. இவர் பா.ஜ .க ஆதரவாளர் என்பதால் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்திப் பேசுவது சாதாரணமாகிவிட்டது .
டெல்லியில் மாதக்கணக்கில் போராடி வருகிற விவசாயிகள் எல்லோரும் பிரிவினைவாதிகள்,பயங்கரவாதிகள் என்று சொல்லி சிக்கலில் மாட்டி கொண்டிருக்கிறார். இப்படி சொன்னதற்காக இணையத்தில் எல்லோரும் கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள் .பழைய கதையெல்லாம் மீண்டும் வரத்தொடங்கியிருக்கின்றன.
இவரும் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் காதலில் இருப்பதாக முன்னர் செய்திகள் அடிபட்டன. பின்னர் இருவரும் எதிரெதிராக பேட்டிகளை தட்டிவிட்டு இன்று வரை அது தொடர்கதையாக இருக்கிறது.
சமீபத்தில் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர், நடிகர் ஹிருத்திக் ரோசனுடனான உறவு பிரச்சினையில் அமைதி காக்கும்படி தன்னை மிரட்டியதாக சர்ச்சையான சில கருத்துகளை கங்கனாவின் பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இதை ஜாவித் அக்தர் மறுத்து, தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து கங்கனா ரனாவத் மீது மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், நடிகை கங்கனா, டி.வி. பேட்டிகளில் தன்னை பற்றி அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த டிசம்பர் மாதம் ஜூஹூ போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார், நடிகை கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, நடிகை கங்கனாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், நடிகை கங்கனாவுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. பின்னர் இவ் வழக்கு விசாரணையை மார்ச் 1 ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.