பிரதமர் மோடி அவ்வப்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவது உண்டு.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் அடிக்கடி குறளையும் ,இதர தமிழ் இலக்கியங்களையும் சுட்டிக்காட்டிப் பேசுவது உண்டு.
உலகளாவிய நீதியை சொல்கிற தமிழ் வேத நூல்தான் திருக்குறள்.
அய்யன் வள்ளுவர் என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சொல்லுவார். ஏனைய தமிழ்ப்புலவர்களும் அப்படியே சொல்லிவந்தார்கள்.
ஒருவேளை மாக்மில்லன் புத்தகம் வெளியிடுவோர் அய்யன் என்பதை பிராமணர் என கருதி விட்டார்களோ என்னவோ வள்ளுவருக்கு பூணுல் அணிவித்து உச்சிக்குடுமி வைத்து விட்டார்கள் .! உருத்திராட்ச மாலையும் இருக்கிறது.
சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் இந்தப்படம் வெளியாகி இருக்கிறது.
எட்டாம் வகுப்பு ,இந்தி பாடப்புத்தகத்தில் வள்ளுவரை பற்றிய பாடத்தில் வள்ளுவருக்கு மனைவி வாசுகி உணவு பரிமாறுவதைப்போல படம் வரைந்திருக்கிறார்கள்.
தற்போது அந்தப் படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. புத்தகத்தை வெளியிட்ட மாக்மில்லன் நிறுவனத்தார் இது குறித்து விளக்குகையில் “சர்ச்சையான படம் பற்றிய தகவல் எங்களின் கவனத்துக்கு வந்திருக்கிறது.உடனடியாக மாற்றுவது தொடர்பாக எடிட்டோரியல் குழுவிடம் பேசி மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்போம் “என்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
8-ம் வகுப்பு புத்தகத்தில், வள்ளுவரை காவி உடையில் ருத்ராட்சம் மற்றும் பூணூல் அணிவித்து, தாடி இல்லாமல் குடுமி வைத்துஇருப்பது குறிப்பிட்ட முற்பட்ட சமூகத்தை சுட்டிக்காட்டுகிற வகையில் சித்தரித்து உள்ளனர்.அது மட்டுமல்ல வள்ளுவருக்கு மனைவி வாசுகி உணவு பரிமாறுவதைப்போல சித்தரித்திருப்பது வம்பு இழுப்பதைப்போலவே இருக்கிறது என கருதுகிறார்கள்.