மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ரஜினியும் நானும் நண்பர்கள். இரண்டு நண்பர்கள் என்ன பேசிக்கொள்வார்களோ அதைத் தான் நாங்கள் இருவரும் பேசினோம். அரசியல் எதுவும் பேசவில்லை. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அது அந்த அளவில்தான் இருந்தது. ஏனென்றால் நானும் காலில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று திரும்பினேன். அதனால் ஒருவருக்கொருவர் பார்த்து ரொம்ப நாள் ஆசசு என்பதால் நலம் விசாரித்துக் கொண்டோம், அவ்வளவு தான் எங்கள் பேச்சு இருந்தது.”
“ரஜினி உடல்நலம் காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ஒதுங்கி கொண்ட பிறகு, அவரை எப்படி அரசியலுக்கு அழைக்க முடியும். அது ஒரு நல்ல நண்பனுக்கு அழகாக,அடையாளமாக இருக்க முடியாது.ரஜினி எங்கள் கட்சிக்கு வாய்ஸ் கொடுக்க நினைத்தால் அவர்தான் கொடுக்க வேண்டும். வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல.
“எனது தலைமையில் மூன்றாவது அணி அமையும் என நம்பிக்கை இருக்கிறது. அதற்கான மேகங்கள் கூடி வருவதாக தோன்றுகிறது. திமுக, அதிமுக இரு கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு முதலில் வந்தது. பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் எல்லோரிடத்திலும் பேசிக் கொண்டிருந்தது தான் எங்கள் கட்சியிலும் நடந்து கொண்டிருந்தது. என்னிடம் நேரடியாக கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை. எனக்கு அதுதான் கணக்கு. தூது விடுவது எல்லாம் எனக்கு கணக்கு கிடையாது.
ஒரு கட்சியின் தலைமையிடம் இருந்து வரும் கேள்வியும், பதிலையும் தான் நான் ஏற்றுக் கொள்ள முடியும. முதுமை என்பது எல்லோருக்கும் வரும் . முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரலாம். எனக்கும் வரலாம். ஆனால் அந்த வயதில் எதுவும் செய்ய முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. என்னுடைய முதுமை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.
சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஆட்சி செய்ய முடியாது என்று சொன்னேன். அதில் என்ன தப்பு? இது யாரையும் குத்திக் காட்டுவதாக ஆகாது. கலைஞர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியையும் என்னுடைய முதுமையை பற்றியும் மட்டுமே பேசினேன்.
கலைஞர் மட்டுமே சக்கர நாற்காலியில் அமர்ந்தவர் என்பது பொருளாகாது அவருக்கு முன்பாகவே அமெரிக்காவின் பிரசிடென்ட் ரூஸ்வெல்ட் போன்றவர்கள் கூட சக்கர நாற்காலியில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இளமையில் இருந்தார்கள்.
ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர்வீர்களா? என்று கேட்கிறார்கள். நல்லவர்கள் எங்களுடன் சேர்வது என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. எங்கள் கதவுகள் அவர்களுக்காக திறந்தே இருக்கும்.
சீமான், சரத்குமார் போன்றவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணியில் இணைவார்களா என கேட்கிறார்கள். ஏன் வரலாமே.மக்கள் நலன் தமிழகத்திற்கு நல்லது என நினைப்பவர்கள் இங்கு வரலாம் என்பது தான் என்னுடைய கருத்து. மக்கள் நீதி மய்ய மாநாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் யாராவது வருகிறார்களா என்று கேட்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நான் நிறைய பேரை கூப்பிட வேண்டியது இருக்கும். எனக்கு கல்வியாகவும்,அறிவாகவும் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எனக்கு நிறைய பேர் இருக்கிறார்கள் .
உதாரணத்திற்கு பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, பட்நாயக், கெஜ்ரிவால் போன்றவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாருமே என்னுடைய நலம் விரும்பிகள் அவர்கள் எல்லோரையும்் கூப்பிட வேண்டும்.
ஆனால் கோவிட் காலத்தைையும் அவர்கள் ஆரோக்கியத்தையும், மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது அவர்கள் எல்லாருமே முதல்வராக இருந்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் ஆட்சி அமைப்பது பற்றி பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை நல்லவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.நான் எம்ஜிஆரின் நல்லவைகளை எடுத்துக்கொள்வேன் கலைஞர் ஆட்சியின் நல்லவைகளையும் நான் எடுத்துக்கொள்வேன்.
நான் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. அவர்களிடத்தில் உள்ள நல்லவைகளை மட்டும் எடுத்து கொள்வேன் .
.அண்ணாபல்கலைக்கழகம் சூரப்பாவுக்கு நீங்க ஆதரவு தெரிவித்து இருக்கிறீர்கள் அவர் மீது விசாரணை ஆணையம் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாக தெரிவித்து இருக்கிறதே என கேட்கிறார்கள்.
விசாரணை கமிஷன் அமைத்தது யார்?
லோக் பாலுக்கு கையெழுத்து போட்டவங்க தானே அவங்க நியமித்த ஆணையம், அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தான் சொல்லும்.
கூடி கலைவது கும்பல்.கூட்டி சேர்ப்பது அல்ல எங்கள் கூட்டம்.
எங்களுடையது சங்கமம் .” இவ்வாறு அவர் கூறினார்.