சென்னையில் நடந்த 46வது தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் நடிகர் ‘தல’ அஜித், 4 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.
46வது தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 5 நாட்கள் சென்னையில் நடந்தது.
இப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 900 துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில், சென்னை ரைஃபில் கிளப் சார்பில் பங்கேற்ற நடிகர் அஜித் , ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.தொடர்ந்து நடந்த செண்டர் ஃபயர் பிஸ்டல் 32 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் அணியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று, மற்றொரு செண்டர் ஃபயர் பிஸ்டல் 32 (என்.ஆர்) 25 மீட்டர் அணியில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
மேலும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் 22 (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீட்டர் அணியில் தங்கப் பதக்கமும் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் 22 (என்.ஆர்) 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் அணியில் வெள்ளிப் பதக்கமும் அஜித் வென்றுள்ளார். அதோடு, ஃப்ரீ பிஸ்டல் 22 (என்.ஆர்) 50 மீட்டர் அணியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதை தல ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.