மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டணியில் உள்ள ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து மற்றும் சமக தலைவர் சரத்குமார் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சித் தலைவர்களோடு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது,
“எங்கள் முதல் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா எனக் கேட்கிறார்கள். யார் கூட்டணிக்கு வந்தாலும் வரவேற்பது எங்கள் கடமை .யார் வந்தாலும் அவர்களை அரவணைத்துச் செல்ல காத்திருக்கிறோம் .
மக்களுக்காக வந்திருக்கிற இந்த அணி முதல் அணி அது முன்னணி நல்லது பயக்கும் என நினைக்கும் எல்லோரையும் நண்பராக நண்பர்களாக பாவித்து அவர்களுடன் பயணிப்போம்.
பொன்ராஜ் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது அப்படியே இருக்கிறது. எங்களுடன் கூட்டணி வைக்க பல கட்சிகளும் தயங்குவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காந்தியார் அணியில் முதலில் மகாராணிகள், மகாராஜாக்கள் என யாருமில்லை. பிற்பாடுதான் வந்தாங்க.
சமீப காலமாக மு.க. ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் செய்து வருகிறீர்களே என கேட்கிறார்கள். முதலில், அதிமுகவை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்கிறீர்களே, திமுகவை மட்டும் விமர்சனம் செய்வது இல்லையே? என கேள்வி எழுப்பியவர்களும் இவர்களே.
என்னதான் செய்வேன் நான்.
இவர்,இவர் இவருக்கு எதிரி. மக்களுக்கு இவர், இவர் எதிரிகள் என முடிவு செய்துவிட்ட பிறகு அதில், அவர் என்ன? இவர் என்ன? எல்லோரையும் போட்டு மிதிக்க வேண்டியதுதான்.
அதுக்குத்தான் ஏற்கனவே ‘புரூஸ்லீ’ கதை ஒன்று சொன்னேன் இல்லையா, ஒரு சுரங்கப்பாதையில் புரூஸ்லி மாட்டிக்கொள்வார். அங்கு ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும். அவரைச் சுற்றிலும் 15 பேர் இருப்பாங்க. புரூஸ்லி ‘டக்’குன்னு எகிறி, அங்கே எரிந்து கொண்டிருக்கும் பல்பை உடைச்சிடுவார்.
ஒரே இருட்டு. அவரது அடி யார் மேல் விழும் என்பதே தெரியாது. அது மாதிரி இனி நான் அடிக்கிற ஆள் எல்லாமே எதிரிதான். சுத்தி சுத்தி அடிக்க வேண்டியதுதான். தென்பட்ட இடங்களில் எல்லாம் அடிக்க வேண்டியதுதான். அதைத்தான் நான் இப்ப செஞ்சுக்கட்டு இருக்கேன்.
அந்தப் பட்டியலில் இனி எல்லோரும் வருவார்கள்.
இங்கே நடக்கும் மியூசிக்கல் சேரில் அவர்களும் வந்து உட்கார வேண்டியதுதான். தேமுதிக உங்கள் அணிக்கு வருவார்களா என கேட்கிறார்கள். உங்களுக்கு இருக்கும் அதே ஆசை எங்களுக்கும் இருக்காதா?
தற்போது அகற்றப்பட வேண்டியவர்கள் அதிமுக, திமுக இருவருமே தான். அதில் ‘டவுட்’ இல்லை. அதனால் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யாமல் இருக்க முடியுமா? தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம். ஆனால் அவர்கள் செய்ததற்கான பிராயச்சித்தம் அவர்கள் தேடிக் கொள்வார்கள். இல்லை என்றால் நாங்கள் அவர்கள் கையில் கொடுப்போம். “
இவ்வாறு அவர் கூறினார்.