ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘நீ சுடத்தான் வந்தியா’.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.
இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும்போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன்.
பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன்.
நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை .அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க வந்தேன்.படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார்.”என்றார்
கதாநாயகியாக நடித்திருக்கும் இலக்கியா பேசும்போது, ” இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.”என்று கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும் போது, ” நீ சுடத்தான் வந்தியா?’ தலைப்பு யாரை சுட வந்தாய்? என்று கேட்பது போல் இருக்கிறது. நான் யாரையும் சுட வரவில்லை. நான் வாழ்த்தத்தான் வந்தேன். இன்றைய காலகட்டத்தில் சினிமா எடுப்பது சிரமம். அதிலும் சிறிய பட்ஜெட் படங்கள் எடுப்பது மிகவும் சிரமம் .எடுப்பதை விட அதை வெளியிடுவது மிகமிக சிரமமான காரியம். ஒரு படத்தின் ஆரம்பமான முதல் நாள் படப்பிடிப்பின்போது கிளைமாக்ஸ் எப்படி எடுப்பது என்று சிந்திப்பது போல் படம் படப்பிடிப்பு தொடங்கும் போதே எப்படி வெளியிடுவது என்ற சிந்தனையும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு வெளியிடுவது இன்று சிரமமாக இருக்கிறது.”என்றார் .
தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,
“இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளை பாடலில் பார்த்தோம்.கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும் .ஏன் என்றால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் நன்றாக ஓடியது .அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான், பயந்தேன்,மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூட போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது.”என்று ஆபாசத்துக்கு ஆதரவாக பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“இன்று நாடே தேர்தல், கூட்டணி என்று பரபரப்பாக இருக்கின்ற நேரம் இது. இந்த நேரத்தில் இந்த பட விழா நடக்கிறது.இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பதாகச் சொன்னார். அவர் விருப்பப்பட்டு வரவில்லை.வேறு வழியில்லாமல் வந்திருப்பதாகத் தனது சூழ்நிலையைக் கூறினார். இன்று ஆளாளுக்கு கதாநாயகன் ஆகவேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். ஆசைப்படுபவர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது.
முன்பு குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது டிக்டாக்கில் இருந்து சினிமாவுக்கு வருகிறார்கள். இது ஒரு கால மாற்றம் தான். இலக்கியா டிக்டாக்கில் இருந்து வந்திருக்கிறார்.
நாம் விதவிதமான உடைகள், உடுத்துகிறோம். ஆனால் எல்லாம் மானத்தை மறைப்ப தற்காகத்தான். அது போல பல வகையான படங்கள் எடுத்தாலும் சினிமா என்பது பொழுது போக்கிற்காகத் தான் .அது காதலைச் சொல்லலாம்,நகைச்சுவையைச் சொல்லலாம் ,அரசியல் பேசலாம், நல்ல கருத்துகளைச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் சினிமா பொழுதுபோக்கிற்காகத்தான். அதுபோல சினிமாவில் கவர்ச்சியும் ஓர் அங்கம். இந்த படத்தின் கவர்ச்சி வியாபாரத்துக்காக என்று புரிந்துகொள்ள முடிகிறது.” என்று இலக்கியாவின் கவர்ச்சிக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி.கதிரவன் கலந்து கொண்டு பேசினார்
விழாவில் படத்தின் இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர்செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன், பாடகர் கானா சேது, பாடலாசிரியர் லோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.