அற்புதமான மனிதர். வேஷம் போடத்தெரியாத சினிமாக்காரர். தன்னுடைய கருத்தில் உறுதியும் இறுதியும் கொண்டவர்.
எவருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றவோ ,விட்டுக்கொடுக்கவோ தெரியாத மார்க்சிய வாதி. அந்த நல்ல மனிதருக்கு வாழவும் தெரியவில்லை.
ஆமாம் எளிமை ,ஏழ்மைதான் இன்றளவும் அவரது சொத்து.
உலகாயுதா என்கிற அமைப்பினை மக்கள் செல்வன் விஜயசேதுபதியின் துணையுடன் நடாத்திச்செல்கிற இந்த மனிதர் திரை உலக சாதனையாளர்களை இனம் கண்டு ஆளுக்கொரு ஒரு பவுன் பொற்காசு வழங்கிய பொதுஉடமைவாதி. ஜனநாதன். எஸ்.பி.ஜனநாதன்
அவர் இன்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்.!
என்ன கொடுமையடா!
2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர்.
.பதினெட்டு ஆண்டுகளில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை ஆகிய நான்கே படங்களை இயக்கியவர்.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ படம் முடிவடைகிற நிலையில்.!
இந்த படத்திற்காக எடிட்டிங் பணியில் இருந்தவர் மத்திய உணவுக்காக இல்லம் சென்றிருக்கிறார்.
திரும்பவில்லை. சுயநினைவற்று மயங்கி கிடந்திருக்கிறார் .
கட்டைப்பிரம்மச்சாரியான இந்த மனிதர் மயக்கமுற்ற செய்தியை சொல்லக்கூட ஆள் இல்லை. உதவியாளர்கள் தேடிச்சென்றபோதுதான் அந்த உயரிய படைப்பாளி மயங்கி கிடப்பது தெரிந்திருக்கிறது.
உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதித்து வருகிறார்கள். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.
அவர் தமிழ்த்திரை உலகத்துக்கு தேவை. ஜனா, எழுந்து வாருங்கள்.!
இறைவனை நம்புவோம். ஜனநாதனை நலமுடன் இல்லத்துக்கு அனுப்பி வை.!