சுல்தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.இதில் கலந்து கொண்டு படத்தின் நாயகன் கார்த்தி பேசியதாவது,”
“இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கை இப்படத்தின் பாத்திரங்கள் கொடுத்திருக்கிறது.
ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதை தான் சுல்தான். அதேபோல், நான் தான் நடிக்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய்யப்படும்.ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக மிக முக்கியம். இப்படத்திற்கு வில்லன் சிறப்பாக அமைந்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை லால் கட்டப்பா மாதிரி. எந்த காட்சியாக இருந்தாலும், எந்த பாத்திரமாக இருந்தாலும் லால் திறமையாக செய்கிறார்.யோகிபாபுவின் படங்களைப் பார்த்து ரசித்து சிரித்திருக்கிறேன். ஆனால், அவருடன் இப்படம் மூலம் முதன்முதலாக பணியாற்றும் போது தான் அவர் மிகப் பெரிய புத்திசாலி என்று தெரிந்தது. அவருக்கு ஒருமுறை போன் பேசும்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றார். அவரிடம் ஒரு விளையாட்டு வீரர் ஒளிந்திருக்கிறார் என்று அப்போது தான் தெரிந்தது. இப்படி பல திறமைகள் அவரிடம் உள்ளது.
நெப்போலியன் அவர்கள் நண்பராக தான் இப்படத்தின் பணியாற்றினார். ராஷ்மிகா இதுவரை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்படத்தில் கிராமத்து பெண்ணாக வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பால் கறப்பது, சேற்றில் வேலை செய்வது, மாட்டுவண்டி ஓட்டுவது என்று அனைத்தையுமே எளிதாக செய்திருக்கிறார். அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். அதேபோல் அவர் புத்திசாலியும் கூட.ஷோபி சிறப்பாக நடனம் அமைத்திருந்தார். சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்கும்படியாக பாக்கியராஜ் கண்ணன் கதை அமைந்திருக்கிறார். அனைவரும் பாதுகாப்புடன் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள் என்றார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா பேசும்போது,
“கார்த்தி சிறப்பாக நடிப்பார் என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்னும் எனக்கு அறிவுரை தேவைப்படுகிறது.இயக்குநர் எனக்கு இப்பட கதையை முதல் முதலாக அழகாக கூறியதற்கு நன்றி. இப்படத்தில் என்னை அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.இதுபோன்ற பின்னணியில் நான் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசை இப்படம் மூலம் நிறைவேறியது..நான் அனைவரையும் விரும்புகிறேன் ‘ஐ லவ் யூ ஆல்’” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,
“காஷ்மோரா படத்தை ஒரு சவாலாக எடுத்தோம். அதுபோலவே தான் இப்படமும் சவாலாக அமைந்தது. அதன்பிறகு வெளியீட்டு தேதி ஒரு வருடத்திற்கு மூன்று தான். பொங்கல், கோடை விடுமுறை மற்றும் தீபாவளி. ஆனால், அதற்குள் கொரோனா பாதிப்பு எல்லாவற்றையும் புரட்டி போட்டது. அதன்பிறகு திரைத்துறை பாதை மாறிவிடுமோ? என்கிற பயமும், சந்தேகமும் இருந்தது. ஆனால், அதைத்தாண்டி எல்லோருக்கும் இருந்த தன்னம்பிக்கை தான் வெற்றிபெற செய்திருக்கிறது.பணம் வந்து விடும். ஆனால், காலதாமதம் ஆகும் என்று என்மீது நம்பிக்கை வைத்து பொறுமையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
கொரோனாவிற்கு பிறகு, இந்திய அளவில் சினிமாவிற்கு நம்பிக்கை கொடுத்தது மாஸ்டர் திரைப்படம் தான். திரையரங்கில் வெளியிட்ட அப்படக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நம்பிக்கை தான் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவெடுக்க வைத்தது.இப்படத்தில் வரும் ஒரு காட்சியை நான் மிகவும் ரசித்தேன். அது, எப்படிண்ணே இவ்வளவு பேருக்கும் சாப்படு போடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு அதை ஏன் கேட்கிறீர்கள்? என்ற காட்சி எனக்கு பொருத்தமாக இருந்தது. அதைப் பார்த்து நான் ரசித்து சிரித்தேன். அந்தளவிற்கு இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பெரிய கூட்டம் இருக்கும்.
நெப்போலியன், லால், இருக்கிறார்கள். இவர்கள் தவிர மயில்சாமி, மாரிமுத்து போன்ற இன்னும் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.இவர்களிடையே நடக்கக் கூடிய உணர்வுபூர்வமான காட்சி அமைப்பு கண்கலங்க வைக்கும்படியாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு தரமான படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.
இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது.