இயற்கை வளம் காக்கப்படவேண்டும். வன விலங்குகள் குறிப்பாக யானைகள் பாதுகாக்கப் படவேண்டும். அவைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் காடன் படத்தின் கதை.
தமிழ் ,தெலுங்கு,இந்தி என மும்மொழிகளில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரானா டகுபதிதான் நாயகன். அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப கலவையாக நடிகர்கள் தேர்வு செய்யப் பட்டிருப்பதால் பலர் நமக்கு அந்நியமாக தெரிகிறார்கள். அந்தந்த கேரக்டர்களுக்கு அவர்கள் நியாயம் செய்திருக்கிறார்கள்.
நீலகிரி மலையில், முக்கியமான ஏரியாவை வளைத்துப்போட்டு அதில் ஒரு டவுன்ஷிப்பை ஏற்படுத்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திட்டம் போடுகிறது. வழக்கம்போல ( அதுதான் உண்மையான நிலை ! ) மந்திரியின் உதவியுடன் யானையின் வழித்தடங்களை மறித்து சுவர் எழுப்புகிறார்கள். அந்த காட்டிலேயே வாழ்கின்ற யானைகளின் நண்பன் ரானா டகுபதி முயன்றும் முடியாமல் போகிறது. சுவர் எப்படி உடைக்கப்படுகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு.ஏ.ஆர் .அசோக்குமார். இவருக்கு முதல் படமாம் .யானைகள் தொடர்பான காட்சிகள் பெரும்பாலும் தாய்லாந்தில் படமாகியிருக்கிறது .கிட்டத்தட்ட 17 யானைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். கும்கியில் வந்த யானையும் இந்த படத்தில் இருக்கிறதாம். ( அது எந்த யானை சார்? )
இந்த படத்துக்காக ரானா 18 கிலோ எடையை குறைத்துக்கொண்டிருக்கிறார். நடிப்பிலும் மாற்றம். ஒரு பக்கத்து தோளை மட்டும் உயர்த்திக் கொண்டு நடப்பது ,ஓடுவது .சினம் கொள்ளும் காட்சிகளில் பற்களை கடிப்பது என அவர் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் வெறித்தனம் .பஸ் ,டிரக் ,போக்குவரத்து நெரிசலில் புகுந்து ஓடுவது என்பதெல்லாம் இயல்புக்கு மாறான முரட்டுத்தனம். காட்டுவாசியின் பிரதிபலிப்பு. சூப்பர். இந்த காட்சிகளை அமைத்தது சிவாவா,சாமா? பாராட்டுக்கள்.! வாழ்த்துகள்.
கிட்டத்தட்ட துரோகி,ஐந்தாம்படை ,உடன் இருந்தே கொல்லும் வியாதி இப்படி எதோ ஒன்று விஷ்ணு விஷாலுக்குப் பொருந்தும். இவருக்கு ஒரு காதல். படம் டாக்குமெண்டரி போல் இருந்துவிடக்கூடாது என்கிற பயத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். உருப்படாத காதல்.! உயிராக வளர்த்த யானை மீது காங்கிரீட் தூண் விழுந்து மரணிக்கும் அந்த காட்சியில் விஷ்ணுவிஷால்தான் துயரத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.உருக்கம் இல்லாமல் போய்விட்டது வி.வி.! ( யானையினால் உருக்கமாக நடிக்கமுடியாது.) ஆனால் ஒளிப்பதிவாளரின் திறமையினால் அந்த காட்சி நமக்கு நெஞ்சில் கனம் ஏற்றுகிறது.
ஆனந்த மகாதேவன் அமைச்சருக்கு ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்பட்ட ஆள். மத்திய அமைச்சரா,மாநில அமைச்சரா என்கிற சந்தேகம் வருமளவுக்கு பல காட்சிகள் ‘ரிச்னஸ் ‘கரை போட்ட வேட்டிதான் அந்தாளு நம்ம மாநிலத்து கரப்ட் ஆளு என்பதை உணர்த்துகிறது.
இன்னும் எத்தனை காடன் வந்தாலும் காடுகளை அழிப்பதை அரசு தடுக்கப்போவதில்லை. வனவிலங்குகளை காப்பாற்றப்போவதுமில்லை.
காடுகளை அழிப்பது அரசின் திட்டமாக அறிவிக்கப்படுகிற காலம் வந்தாலும் ஆச்சரியப்படப்போவதில்லை;. அதனால் இயக்குநர் பிரபு சாலமன் இனிமேலும் யானைகள் பக்கமாக போகவேண்டாம்.