இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காதலுக்காக இஸ்லாம் மதத்தை தழுவி தனது பெயரை அப்துல் ஹாலிக் என்று மாற்றிக் கொண்டார்.
சூழ்ச்சியாளர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவான் எனும் பொருள் தரும் வரிகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருந்தார்.இந்த வரிகள் குர்ஆனில் இருந்து எடுக்கப்பட்டது என்கிறார்கள்.
இந்த பதிவினைப் பார்த்து விட்டு ஒரு ரசிகர், ‘உங்கள் இசைக்காகத்தான் நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்கள் மத நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள அல்ல. நான் உங்களைத் தொடரட்டுமா வேண்டாமா’ என்று கேட்க, இதற்கு யுவன், ‘தொடர வேண்டாம்’ என்று பதில் அளித்திருந்தார்.
“நான் ஒரு இந்தியன், ஒரு தமிழன், ஒரு இஸ்லாமியன். அரேபியாவில் மட்டும்தான் இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்று நினைத்தால் அது அறியாமையையே காட்டுகிறது. நம்பிக்கை, இனம் இரண்டும் வெவ்வேறு. மொழி, இனம் இரண்டும் வெவ்வேறு. தேச அடையாளமும், மதமும் வெவ்வேறு. நம்பிக்கை என்பது மட்டும்தான் நமக்குள் இருப்பது.
இந்த எளிய விஷயத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் வேறு எதைப் புரிந்துகொள்ள முடியும்? நான் என் நேரத்தை ஒதுக்கி இதை உங்களுக்கு விளக்கக் காரணம் உங்கள் உளறலை நீங்கள் நிறுத்த வேண்டும் என்பதால்தான். இப்படி வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள். உங்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும்” என்று இன்னொருவருக்கு அளித்துள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது யுவனுக்கு சிக்கலை கொடுத்திருக்கிறது. பிஜேபியினரைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார் என சொல்லி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.