கொரோனா தொற்று 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று இரவு நேர ஊரடங்கு,மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு அறிவிப்புகளை அறிவித்தது.இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு,மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு குறித்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்யாவிடில், தியேட்டர்களை மூடுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து
தமிழக திரையரங்கு மல்டிபிளக்ஸ் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
அரசு இரவு நேர ஊரடங்கு , மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அறிவித்து தியேட்டர்களில் இரவு காட்சிகள் திரையிடுவதை ரத்து செய்யவும், ஞாயிற்றுகிழமைகளில் முழுமையாக தியேட்டர்களை மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளது.ஏற்கனவே தியேட்டர்களில் தினமும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதனால் இனிமேல் புதிய படங்கள் எதுவும் திரைக்கு வராது.
தியேட்டர்களுக்கு பார்வையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால் எங்களுக்கு தண்டனை என அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 112 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. மீதி உள்ள தியேட்டர்களில் 200 தியேட்டர்கள் மூடப்படும் நிலையில் இருக்கிறது. எனவே மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படும் ஊரடங்கால் எங்களால் தியேட்டர்களை நடத்த முடியாது.
எனவே (நாளை) காலை இணையதள ஜூம் செயலி மூலம் தியேட்டர் உரிமையாளர் கூட்டம் நடத்தி ஆலோசித்து தமிழ் நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களை மூடுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்
தமிழ்நாடு திரையரங்குகளின் உரிமையாளர்களின் சங்க இணைச்செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறியதாவது,”திரையரங்குகளுக்கு எதிராக எடுக்கப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கை என்றே தோன்றுகிறது. அரசின் இந்த முடிவு தியேட்டர்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலையை உருவாக்கி விடும். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் ஏற்கனவே திரையரங்குகளுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போன நிலையில், தற்போது மீண்டும் கர்ணன் பட வெளியீட்டுக்கு பின்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேர காட்சிகளை சொல்லலாம். மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தால், மறுபடியும் மக்கள் திரையரங்குக்கு வர தயங்கும் நிலையே உருவாகும்.
தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளில் அதிகரித்து வருகிறது. மேலும் வரும் மே மாதம் அடுத்தடுத்து வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய் சேதுபதியின் லாபம், விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் போன்ற திரைப்படங்களின் வெளியீடு, அப் படங்களின் தயாரிப்பாளர்களால் தள்ளி வைக்கப்படும் சூழல் உருவாகலாம். இது மீண்டும் திரையரங்கை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களையும், திரை துறையினரையும் கடுமையாக பாதிக்கும். எனவே ஊரடங்கு முடிவு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசின் இந்த திடீர் முடிவு திரையரங்குகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம் கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, தியேட்டர்களை இழுத்து மூட வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளோம், அரசின் இந்த திடீர் முடிவு குறித்து நாளை காலை இணைய தள ஜூம் மீட்டிங் நடத்த உள்ளோம்.
இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் ஊரடங்கு குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளோம் அதன் முடிவில் திரையரங்குகளை இழுத்து மூடுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.