டைட்டிலே கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. திரிஷாவின் பெயரைக்கூட ‘திர்ஷா ‘என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். நியூமராலஜியாக இருக்கலாம்.
ஏணி வழியா உயரப்போவதும் பாம்பு கடிச்சு கீழே இறங்குவதும் விளையாடுவதற்கு உற்சாகமாக இருக்கும். ஆனா இந்த விளையாட்டை வைகுண்டஏகாதசியில் தான் விளையாடுவார்கள். யார் பரமபதம் போவது என்பது இந்த விளையாட்டில் தெரிந்துவிடுமாம்.
இப்படியொரு மூட நம்பிக்கை தற்போது இருக்கிறதா என்பது தெரியாது.
ஆனால் கதாசிரியர் ,இயக்குநர் திருஞானம் அரசியலும் திரில்லரும் கலந்த கதைக்கு அந்த பெயரை வைத்திருக்கிறார்.பரமபதம்.
தற்கால அரசியல்தான் மெயின்.!
அப்போலாவில் தொடங்கி வாரிசு அரசியல்வரை பதவி அரிப்புகள் பற்றிய அலசல்.
சுதந்திர தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் வேல.ராமமூர்த்தி. பணம் கொடுத்து அரசியல் நடத்துவது ,வாக்காளர்களுக்கு காசு ,கட்டிங்,பிரியாணி கொடுப்பது இதிலெல்லாம் இவருக்கு உடன்பாடு கிடையாது. “உயிரை கொடுத்து ஆட்சிய பிடிப்பம்யா!” என்பதுதான் இவரது லட்சியம்.
அப்புறம் என்ன , தலைவரை போட்டுத்தள்ளிட வேண்டியதுதானே?
அதுதான் நடக்குது.! ஆனால் யாரால் என்பதுதான் சஸ்பென்ஸ்.!
அதனால கதையை சொல்வதை இங்கேயே நிறுத்திட்டு மத்த விஷயங்களை பார்ப்பம்.
திரிஷா டாக்டராக வருகிறார். வாய் பேசாத குழந்தை பிறந்ததும் புருஷன் பிரிந்து விடுகிறார். தலைவர் சாவு பற்றிய ரகசியம் இவரிடம் இருப்பதால் கடத்திக்கொண்டுபோய் இம்சை பண்ணுகிறார்கள். நன்றாக நடித்திருக்கிறார். எந்த நடிகையையோ மனதில் வைத்துக் கொண்டு அவரை விட சிறப்பாக நடிக்கவேண்டும் என்கிற உந்துதல் தெரிகிறது.
தலைவருக்கு அடுத்த இரண்டாவது இடம் தனக்குத்தான் என்கிற வெறியோடு திரிகிற ஏ எல்.அழகப்பனுக்கு அரசியல் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. அனுபவசாலி. இவருக்கு டப் கொடுக்கிற ஆள் யார் தெரியுமா?
சோனா. ! ஆத்தாவை திரையில் பார்த்து ரொம்பநாள் ஆச்சு !
“தர்மயுத்தம் நடத்துங்க .நீங்கதான் அடுத்த சி.எம் “என்று உருவேத்துகிற அரசியல் கைத்தடி சாம். “இருபது ரூபா நோட்டுல எக்சேஞ்ச் அரசியல் நடந்திட்டிருக்கு “என்கிற டயலாக்ஸ் எல்லாம் சாம் சொல்லும்போது கேட்கிறதுக்கு ஒரு டைப்பாதான் இருக்கு.!
ரிஷி ரிச் .மாலைக்கண் நோயாளி. அடியாள் வேஷமெல்லாம் இவருக்குத் தேவைதானா? இவர் காட்டுகிற மேனரிசமெல்லாம் ..பாவமா இருக்குங்க!
“உயிர் தமிழுக்கு. உடல் மண்ணுக்கு” என்று திடீர் வில்லனாக மாறி அப்பா வேல.ராமமூர்த்தியை போட்டுத்தள்ளுகிறார் நந்தா.இந்த மாதிரி சஸ்பென்ஸை எல்லாம் எப்ப மூட்டை கட்டப்போறாங்களோ தெரியல.!
சரி பரமபதம் எப்படி?
பெரிய பாம்பு கடிச்சிருச்சு சார்!