கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்துள்ள தெறி படம் இன்று வெளியானது. ஆனாலும் தமிழ் நாட்டில் பெரிய ஏரியாவான செங்கல்பட்டில் வெளியாவது பிரச்சினைக்குள்ளானது.இந்த ஏரியா தியேட்டர்கள் தெறி படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம் என்று கூறி வாங்க மறுத்தன. இந்த நிலையில் அங்கு தானே சொந்தமாக சில திரை அரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளார் தாணு. செங்கல்பட்டு ஏரியாவின் முக்கிய அரங்குகளான காசி, வெற்றி உள்ளிட்ட பல அரங்குகளில் தெறி வெளியாகாததால் வெறிச்சோடின. இது ரசிகர்களை மிகவும் ஆத்திரத்துக்குள்ளாக்கியது. காசி தியேட்டர் மீது கல்வீச்சும் நடந்தது. ஆனால் தியேட்டர்காரர்களின் நெருக்கடிக்கு தாணு அசைந்து கொடுக்கவில்லை. இதுகுறித்து கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில், “செங்கல்பட்டில் நிறைய திரையரங்குகளில் படங்கள் திரையிட்டு இருக்கிறோம். மாயாஜால், ஐநாக்ஸ் விருகம்பாக்கம், ஏஜிஎஸ், எஸ் 2, கணபதிராம், பொன்னேரி வெற்றிவேல், வேளச்சேரி லக்ஸ், வேளச்சேரி பிவிஆர் ஆகிய திரையரங்குகளில் வெளி யிட்டுள்ளோம். மற்ற திரையரங்குகளில் ரஜினி, விஜய் படங்கள் என்றாலே சிலர் சூழ்ச்சி செய்து பணத்தைச் சுருட்ட முயற்சி செய்கிறார்கள். சில திரையரங்க உரிமையாளர்கள் நாங்கள் பணம் தர மாட்டோம், படத்தை ஓட்டி பணம் தருகிறோம் என்கிறார்கள். ரூ 100 கோடி முதல் போட்டு படம் எடுத்திருக்கிறோம், ஆனால் டெபாசிட், அட்வான்ஸ் என எந்த தொகையுமே தராமல், படத்தை எடுக்கப் பார்க்கிறார்கள். இது நியாயமா…இது மாதிரியான நபர்களால் தமிழ்ச் சினிமா மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளது,” என்கிறார்.இச் சம்பவம் திரையுலகில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.