தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
நடிகர் சங்கத்தில் இருந்து விலகலுக்கான காரணம் குறித்து சிம்பு கூறியதாவது,, “நான் சிறுவயதில் இருந்தே நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன்.சமீபத்தில், பீப் பாடல் குறித்து பெரிய சர்ச்சை உண்டானது. ஆனால், அப்பாடலை நான் வெளியிடவே இல்லை. அது குறித்து எனக்கு பிரச்சினை ஏற்பட்ட போது இந்த நடிகர் சங்கம் எங்கே போனது?. நான் வெளியிடாத பாடலுக்கு பிரச்சினையான போது நடிகர் சங்கம் ஒரு உறுப்பினருக்கு துணையாக நின்றிருக்க வேண்டும். ஆனால் அதை பண்ணவில்லை.தற்போது நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் அனைத்து முன்னணி நடிகர்களை அழைத்து கேவலப்படுத்தி விட்டார்கள். இப்படி கேவலப்படுத்தும் நடிகர் சங்கத்தில் நாம் ஏன் உறுப்பினராக இருக்க வேண்டும் என தோன்றியது. ஆகவே நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து தனது விலகல் கடிதத்தை சிம்பு வரும் 22-ம் தேதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நடிகர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்க சில நடிகர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.