சென்னையை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்புநடந்து வந்தது. கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதி தீவிரமானதையடுத்து,அரசின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு முடியும் வரை (மே 31 ம் தேதி) வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி அமைப்பின் தலைவர் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தமிழ்திரைப்படத்தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில்,ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும்,இதனால் பலருக்கும் தொற்று பரவும் அபாயகரமான சூழல் உள்ளதாகவும் அரசு அதிகாரிகளுக்கு புகார்கல் குவிந்தன. இதையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், மற்றும் பூந்தமல்லி தாசில்தார் சங்கர் ஆகியோர் தலைமையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்குள் நேற்று மாலை அதிரடியாக புகுந்து அங்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது தெரிய வந்தது.உடனடியாக படப்பிடிப்பில் ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.பிக்பாஸ் அரங்கத்திற்குள் இருந்த 7 நடிகர்கள், நடிகைகள் கொரோனா கவச உடைகளுடன் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தபட்டனர்.
அவர்களின் உடமைகள் எடுக்க சிறிது கால நேரம் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களும் அங்கிருந்து கார்களில் கிளம்பி சென்றனர்.தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தியதையடுத்து, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மலையாள பிக்பாஸ் அரங்கத்தின் மூன்று நுழைவாயிலுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த பிக்பாஸ் அரங்கத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.