’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களைத்தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம் குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஆயுஷ்மான் குரானா நடித்த ’பதாய் ஹோ’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
அஜித்தின் ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்ததும் கோவையில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கவுள்ளார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார் என்றும், அதற்கேற்ற ஏற்பாடுகளுடன் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக கே பாக்யராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.