கிட்டத்தட்ட 160 படங்கள் நடித்திருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழக ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்டவர். அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பை அவ்வப்போது எகிற செய்து கொண்டு வந்தவர்.
“இப்போது மாற்றம் இல்லையென்றால் எப்போதுமே மாற்றம் இல்லை. போரை சந்திக்க தயாராக இருங்கள் “என்று தன்னுடைய ரசிகர்களை ஊக்கப்படுத்திக்கொண்டு வந்தார். ஆனால் இவர் அரசியலுக்கு வரவே மாட்டார். தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக பேசுகிறார் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் மத்தியில் ஆள்கின்ற பிஜேபியின் உயர்மட்டத்தலைவர்கள் பிரதமர் மோடி ,அமித்ஷா ஆகியோர் இவர் அரசியலுக்கு வருவார்.அவரை பயன்படுத்திக்கொண்டு பிஜேபியை தமிழகத்தில் ஆள வைத்து விடலாம் என்று நம்பினார்கள்.
அவர்களைப்போலவே தமிழகத்தில் தங்களை உயர்த்திக்கொள்ளலாம் என்கிற கனவுடன் இருந்தவர்தான் தமிழருவி மணியன் என்கிற பழைய காங்கிரஸ்காரர்.இவருடன் சில ஊடகத்தினரும் நம்பினார்கள் .
ஆனால் உடல் நிலைய காரணம் காட்டி அரசியலுக்கு மிகப்பெரிய மலர் வளையத்தை வைத்து வீர அஞ்சலி செலுத்திவிட்டார் ரஜினி.
அவரது அரசியல் ஆசைக்கு குழி வெட்டிய முக்கிய பங்காளி கொரானா என்கிற கொடிய கொள்ளை நோய்..மரணத்துக்கு அஞ்சாத மனிதர் யாருண்டு ?
அரசியலை கைவிட்ட ரஜினியினால் சினிமாவை விட முடியவில்லை.அவர் வேண்டாம் என நினைத்தாலும் தயாரிப்பாளர்கள் விடுவதாக இல்லை. ரஜினி வைர சுரங்கம்.எப்படி விடுவார்கள்.?
ஆனால் தற்போது நடித்துக்கொண்டிருக்கிற ‘அண்ணாத்த ‘திரைப்படம்தான் தீர்மானிப்பதாக இருக்கும் என்கிறார்கள் திரை உலகத்தினர்.
அண்ணாத்த கடைசிப்படமா அல்லது இன்னும் சில படங்கள் நடித்தபிறகு கடைசிப்படம் என்பது நிகழலாமா?
அண்ணாத்த ஷூட்டிங்கின் போது படக்குழுவினரிடம் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினி.
“அண்ணாத்த’ என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். கொரானா நேரத்தில் இந்த படத்தை முடிக்க முடியுமா என்கிற கவலை இருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தை முடித்துவிட்டேன். இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் உடல் ஒத்துழைத்தால் பார்க்கலாம் “என தன்னுடைய நிலைமையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நல்லதே நடக்கும் என்றே நம்புவோம்.