திருவருட்செல்வர் என்கிற படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மகா பெரியவரைப்போல வேடமிட்டு நடித்திருப்பார். பழுத்த பழமாக இருப்பார்.
அந்த வேடத்துடன் யாரையோ ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஒப்பனையை கலைக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் அப்படியே வீட்டுக்கு கிளம்புகிறார்.
அன்னை இல்லம் வந்தது.
காரை சற்று முன்னதாக நிறுத்திவிட்டு வாசல் வரை நடந்தே செல்கிறார்.
“அம்மா ,தாயே !” முதியவரின் நெகிழ்ந்த குரல்.
குரலில் இருந்தது பசியின் அடையாளமோ என்னமோ ,அன்னை ராஜாமணி அம்மையார் வாசலுக்கு வந்தார்.
அடையாளம் தெரியவில்லை. காவி உடையில் யாரோ ஒரு தேசாந்திரி வந்திருப்பதாக நினைத்துக்கொண்டார் போலும்.
“தாயே ..நான் சிவபக்தன் .கைலாயநாதனை கும்பிடுவதற்காக போய்க் கொண்டிருக்கிறேன்.வழியில் கிடைப்பதை சாப்பிட்டு விட்டு பயணம் போய்க் கொண்டிருக்கிறேன் தாயே ,ஒரு வாய் சோறு கிடைக்குமா?”
குரலில் இருந்த குழைவு ..அந்த பெரியவரை அழைத்துக்கொண்டு செல்கிறார் அன்னை ராஜாமணி .
பெரியவருக்கு உணவு பரிமாறப்பட்டது.
அவர் சாப்பிடுகிற தோரணை அன்னையாருக்கு சற்றே சந்தேகத்தை அளிக்க முகம் மாறுகிறது.”நம்ம கணேசன் சாப்பிடுவது மாதிரியே இருக்கிறதே “என கூர்ந்து கவனிக்க ,பிள்ளையைக் கண்டுபிடித்துவிட்டார் என்பதை சிம்மக்குரலோன் உணர “அம்மா “என பெருங்குரல் எடுத்து சிரிக்கிறார்.
வந்திருப்பது தன்னுடைய பிள்ளையே என்கிற பிரமிப்பு பெற்றவர்க்கு.!
அன்னை இல்லமே ஆனந்தத்தில் !