கொரோனா லாக்டவுனில் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
இது குறித்து அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,”இந்தப் பேரிடர் காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் இயல்பு வாழ்க்கை பெரும்இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது.சில ஆசிரியர்கள் நிர்வாகம் தரும் பாதி சம்பளத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். பல ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் வேலையை இழந்துள்ளார்கள். ஓராண்டிற்கும் மேலாக மாற்று வேலைவாய்ப்புகள் இன்றியும், வருமானம் இல்லாமலும் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகின்றனர்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கரங்களில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சமூகத்தை நல்வழியில் செலுத்தும் அரும்பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் இவர்கள். குடும்பத்தைக் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கும் இவர்களிடம்‘ஆசிரியர் பணி என்பது மக்கத்தான சேவை’ என்று சொல்லி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதில் நியாயம் இல்லை. ஆசிரியர்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே அல்லற்படும்போது, எப்படி முழு மனதோடு மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தமுடியும்? பள்ளிகள் திறக்கும் வரை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அரசு உடனே செவி மடுத்து செயலாற்ற வேண்டும்.
தகுதி, அனுபவம் அடிப்படையில் ஆசிரியர்களின் ஊதிய வரன்முறையை நிர்ணயித்து அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்யவேண்டும். ஆசிரியர்களின் பணியிடப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனே வழங்கிட கல்வி நிறுவனங்களை அரசு வலியுறுத்த வேண்டும். அறியாமை அகவிருள் அகற்றி அறிவொளி தீபம் ஏற்றும் ஆசிரியப் பெருந்தகைகளின் வாழ்வில் ஒளி குன்றிட நாம் அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.