அதிமுக இப்போதுதான் தன்னுடைய பலவீனத்தை உணரத்தொடங்கியிருக்கிறது.
மிகப்பெரிய ஆளுமைகளான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருவரது தலைமையில் வளர்க்கப்பட்ட அந்த இயக்கம் இன்று மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. வழி நடத்தி செல்ல சரியான தலைமை இல்லாத காரணத்தினால் திண்டாடிக்கொண்டிருக்கிறது.
ஓ.பன்னீர் செல்வம் ,எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது கூட்டுத்தலைமை இருந்தும் தொண்டர்களின் நம்பிக்கையை சிதற விட்டுக்கொண்டிருக்கிறது.
பிஜேபியின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டிய கட்டாயத்தில் பழனிசாமி .
எடப்பாடியுடன் இணங்கிச்செல்லாமல் தனித்து இயங்கும் நோக்கத்துடன் கட்சியை கொண்டு செல்கிறார் ஓபிஎஸ். அவ்வப்போது ஆளுங்கட்சியான திமுகவின் திட்டங்களை பாராட்டவும் தயங்குவதில்லை.
இரட்டைக்காளைகள் பூட்டப்பட்ட வண்டி கட்டுப்பாடற்ற காளைகளினால் நிலை தடுமாறி செல்கிறது. இதுதான் இன்றைய அதிமுகவின் நிலைமை.
மத்திய உளவுத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக சொல்லப்படுகிற சசிகலாவை பயன்படுத்தி அதிமுகவை ஒற்றுமையை காப்பாற்ற நினைக்கிறது பிஜேபி தலைமை என்கிறார்கள்.
ஒன்று பட்ட அதிமுகவின் உதவியுடன் தமிழகத்தில் பிஜேபியின் ஆதிக்கத்தை வலுப்படுத்த முடியும் என்று பிஜேபி மேலிடம் நினைக்கிறது.
தேர்தலுக்குப்பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்களின் ஆதரவினை பெருமளவில் பெற்று வருவதை தடுக்கும் வகையிலும் சசிகலா என்கிற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஒரு சின்ன பிளாஷ்பேக்……..
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராக இருந்த ஓபிஎஸ் வலுக்கட்டாயமாக சசியினால் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டார்.
பின்னர் சசிகலாவின் தயவால் இபிஎஸ் முதல்வராக பதவிக்கு வந்தார்.
அன்று தொடங்கிய ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோருக்கு இடையேயான பனிப்போர் இன்று வரை நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. சசியினால் தன்னை எதுவும் செய்ய முடியாது .பிஜேபி அரசு மத்தியில் இருக்கும்வரை சசி ஒரு ரப்பர் பாம்புதான் என்பதாக எண்ணியதின் விளைவு எடப்பாடி கடுமையாக சசியை எதிர்க்க தொடங்கி இருக்கிறார்.
அதிமுக ஆட்சி இருந்த வரை பெரிதாக வெடிக்காத இவர்களின் மோதல் விவகாரம், தற்போது பகிரங்கமாக வெளிவந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தற்போது இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு தனிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்,
பிளாஷ்பேக் ஓவர்……
எதிர்க்கட்சித் தலைவராக இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறினார் ஓபிஎஸ்.
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற, இபிஎஸ், தமிழக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் வேண்டும் என்றும், மாநிலத்திற்கு அதிக ஆக்ஸிஜன், கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதையும், தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
ஓபிஎஸ் மட்டும் சும்மா இருப்பாரா என்ன? தனது பங்கிற்கு,’மாநிலத்தில் கறுப்பு பூஞ்சை தொற்றுநோயான மியூகோமைகோசிஸைக் கட்டுப்படுத்தவும், போதுமான கொரோனா தடுப்பூசிகளை வழங்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு’ அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து இபிஎஸ்சை அவரது ஆதரவாளர்கள்,எதிர்கட்சித்தலைவர் நீங்களா,அவரா? என உசுப்பேற்ற, கடந்த மே 25ம் தேதி அன்று, இபிஎஸ் தனது தனிப்பட்ட அறிக்கையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் கொரோனா இறப்புகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கணக்கிடவும் மாநில அரசை வலியுறுத்தினார்.
இவர்கள் இருவரும் தனித்தனியாக அறிக்கை விடுவது இருவரது ஆதரவாளர்களுக்கு இடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அதிமுக கட்சி தொண்டர்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்திஇருப்பதாகவும் ,இந்நிலையில் சசிகலா இருந்திருந்தால் நம்ம கட்சிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா? என பெரும்பாலான தொண்டர்களும், கட்சியைப் பற்றி கவலைப்படாமல் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் இவர்களுக்கு ஆதரவாக பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக செயல் பட்டு விட்டோமே என பல பொதுக்குழு உறுப்பினர்களும் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனராம்.
இதற்கிடையே,” கவலைப்படாதீர்கள். கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன், கண்டிப்பாக கட்சியை சரிசெய்துவிடலாம்” என்று அதிமுக பிரமுகர் ஒருவருடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
“எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? நான் சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக கட்சியை சரிபண்ணிவிடலாம். நிச்சயம் வருவேன்.கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள். நிச்சயம் நான் வந்துவிடுவேன்.இவ்வாறு அந்த தொலைபேசி உரையாடலில் அவர் தெரிவித்துள்ளார்.
“எடப்பாடி பழனிசாமியினால் ரத்தக்கண்ணீர் வருதும்மா ” என்று போனில் பேசிய விசுவாசி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
சசிகலாவின் டெலிபோன் உரையாடல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.