தமிழ்த் திரையுலகில் ‘பான் -இந்தியா ‘ இயக்குநராக இருப்பவர் ஷங்கர்.
இவரது இரண்டு மகள்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். இவர் பிரபல தொழிலதிபர் தாமோதரனின் மகன்.
ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27, 2021) அன்று சென்னையில் நடக்க இருக்கிறது.
கொரோனா காலம் என்பதால் மிகச் சிலருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஷங்கர் மனைவியுடன் சென்று அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார்.
அழைப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கு ஷங்கர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதில், உங்களுடைய ஆதார் அட்டையை அனுப்பிவையுங்கள் அதோடு தடுப்பூசி செலுத்திக் கொண்டவரா? செலுத்தியவர் என்றால் அதற்கான சான்றையும் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருடைய ஆதாரையும் வாங்கி, இவ்வளவு பேர் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்கிற விவரத்தோடு அரசு அனுமதி பெறுவதற்காகவே அனைவருடைய ஆதார் மற்றும் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களா என்கிற விவரத்தையும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.