இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மூத்த கலைஞர் திலீப்குமார் மறைந்து விட்டார்.
இவரது இயற்பெயர் யூசுப்கான்.டிச.11 ,1922-ல் பிறந்தவர்.
‘டிராஜிடி கிங் ,அல்டிமேட் மெத்தட் ஆக்டர் ,இயல்பான நடிகர் “என்று சத்யஜித்ரே பாராட்டியவர்.
ஜ்வார்பட்டி முதல் படம். 60 ஆண்டுகள் திரை உலக வாழ்க்கை.
அந்தாஜ் ,பாபுல், தேவதாஸ் ,மதுமதி ,மொகல்-ஏ -ஆஜம்,ராம்-அவுர் ஷ்யாம் , கங்கா -யமுனா . தீதார் ,ஆன் ஆகிய படங்கள் இவரது வெற்றிப்படங்களாகும்.1976 -ல் இடைவெளி விட்டு 81 -ல் கிரந்தி படம் பண்ணினார். இவரது கடைசி படம் ‘கிலா ‘
பத்ம பூஷன் ,பத்ம விபூஷண் ,தாதா சாஹேப் அவார்டு , பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ -இமிதாஜ் ,ஆகிய விருதுகளை பெற்றவர். ராஜ்ய சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பாகிஸ்தானின் விருது பெறுவதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது வாஜ்பாயி தான் சமரசம் செய்து வைத்தார்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தார் என்பதும் இவர் ஒரு இசுலாமியர் என்பதும் எதிர்ப்புக்கு அடிப்படை காரணம்.
திலீப்குமாரின் பிள்ளைப்பருவ நண்பர் ராஜ்கபூர். பக்கத்து வீடு .
அப்பாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் வீட்டை விட்டு வெளியேறி பூனா ( புனே.) வில் உள்ள இரானியர் கபேயில் வேலையில் சேர்ந்தார்.சுய முயற்சியில் திறக்கப்பட்ட சான்ட் விச் ஸ்டால் உதவியாக இருந்தது. அங்குள்ள ஆர்மி கிளப்புக்கு கான்டராக்ட் முறையில் சப்ளை செய்தார். கான்டராக்ட் முடிந்ததும் கையில் 5 ஆயிரம் ரூபாயுடன் பம்பாய் சென்றார்.
இங்குதான் டாக்டர் மசானியை சந்தித்தார். பம்பாய் டாக்கீஸ் அதிபர் நடிகை தேவிகா ராணியுடன் சந்திப்பு நிகழ்ந்தது. மாதம் 1250 ரூபாய் சம்பளத்தில் இவரிடம் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்தார்.
அப்போதுதான் அவருக்கு நல்ல நேரம் போல. பிரபல நடிகர் அசோக் குமாரின் நட்பு கிடைத்தது. யூசுப்கான் என்கிற பெயரை கவர்ச்சிகரமாக திலீப்குமார் என மாற்றியவர் அவர்தான்.!
நடிகை தேவிகா ராணி இவரை வைத்து ஜூகுனு என்கிற பெயரில் எடுத்த படம் நல்ல வெற்றியைத் தந்தது. இந்தப்படம்தான் திலீப்குமாருக்கு முதல் படம்.
ஷோலே வருகிறவரை இவரது மொகல்-ஏ-ஆஜம்தான் மிகப்பெரிய வசூலை வாரி வழங்கிய படமாக இருந்தது.
மிகப்பெரிய வாய்ப்பாக வந்த ‘லாரன்ஸ் அரேபியா ‘படத்தில் நடிப்பதற்கு திலீப் குமார் மறுத்து விட்டார்.
இவரது முதல் காதலி காமினி கவுசல் என்கிற நடிகை. திருமணமானவர்.
இரண்டாவது காதல் பிரபல நடிகை மதுபாலாவுடன்.! பின்னர் ஆஷ்மியை மணந்து கொண்டார் ஆனால் நீடிக்க வில்லை.
பின்னர் சைரா பானுவை கைப்பிடித்தார். 1972 -ல் சைரா கரு தரித்தார். உயர் ரத்த அழுத்தம் 8 மாத குழந்தையை கொன்று விட்டது.கொடி கழுத்தினை சுற்றியிருந்தது.
திலீப்குமாரின் மொகல்-ஏ.ஆஜம் போஸ்டரை 6 லட்சம் கொடுத்து ஷாருக் கான் வாங்கியது குறிப்பிடத்தகுந்தது.
அந்த மாமனிதர் திலீப்குமார் இன்று நம்மிடையில் இல்லை.மரணம் அணைத்துக்கொண்டு விட்டது.
அவரது மறைவுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்
“இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி. “