தன்னுடைய திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பரபரப்பான நிகழ்வினை நடத்திவிடுவார்.
அதுனால் வரை சோர்வடைந்து கிடந்த அவரது ரசிகர்களும் நீரோபியான் இன்ஜெக்சன் போட்டது போல உற்சாகமாகிவிடுவார்கள். ஒரு புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள்.தங்களின் தலைவரின் படத்தை வெற்றி பெற வைக்கிற முயற்சியில் இறங்கி விடுவார்கள்.
ஆக அவரது இன்றைய மக்கள் மன்ற செயலாளர்கள் சந்திப்பும் அத்தகையதே !
இப்படி நினைப்பதற்கு அதிகமான காரணங்கள் இருக்கிறது.
“சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை ,உடல் நலம் ,ஆகியவை காரணமாக அரசியலுக்கு வரவே மாட்டேன் ” என அறுதியிட்டுச்சொன்னவர் சூப்பர் ஸ்டார்.
இதே சூப்பர் ஸ்டார்தான் “நீங்களெல்லாம் காவலர்கள் , அப்படித்தான் அழைக்கப்படுவார்கள். போரில் இறங்க தயாராக இருங்கள். இப்போது மாற்றமில்லை என்றால் இனி எப்போதும் மாற்றமில்லை” என திராவிட அரசியலுக்கு எதிராக முழங்கினார் .ஆனால் உடல் நலத்தைக்காரணம் காட்டி ஒரு நொடியில் அரசியல் ஆசைக்கு தீ மூட்டிவிட்டார்.
அது அவரது ரஜினி மக்கள் மன்றத்தை பாதித்தது.
அதுநாள்வரை வேட்கையுடன் இருந்த அவரது மன்றத்தினரை நோகடித்துவிட்டது. அல்லது பொசுக்கி விட்டது.
“கமல்ஹாசன் கட்சியை தொடங்கி போட்டியிடுகின்ற அளவுக்கு துணிந்து விட்டார் .ஆனால் அரசியலுக்கு வருவதாக சொல்லி ஆசை காட்டி இன்று நம்மை அதோ கதியில் தள்ளிவிட்டார் தலைவர் என வெறுத்துப்போனார்கள். அப்படி வெறுத்தவர்கள் பல திசைகளில் பிரிந்து பல கட்சிகளில் இணைந்து விட்டார்கள்.காட்சி மாறிவிட்டது.
அப்படி சென்றவர்களின் இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த இடங்களை நிரப்பியாக வேண்டும். அதற்கு எஞ்சியிருக்கிற ரசிகர்களுக்கு ஊக்கம் கொடுத்தாக வேண்டும். அதன் விளைவுதான் இன்றைய மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு என்பதாக நினைத்தார்கள்.
ஆனால் அவர் பேரிடியை இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.
“ரஜினி மக்கள் மன்றங்கள் கலைப்பு. அரசியலுக்கு வரவே மாட்டேன் ” என்பதாக அறிவித்திருக்கிறார்.
இது அண்ணாத்தே படத்தின் வெற்றியை பாதிக்காதா?
கடந்த காலத்தில் ரஜினி எப்படியெல்லாம் பேசினார் என்பதை கடைசியாக சற்று விளக்கமாகவே சொல்வது நல்லது என நம்புகிறோம்.
2017ம் வருடம் , டிசம்பர் 31-ல் `நேரடி அரசியலுக்கு வருகிறேன்’ என்றும் தனிக்கட்சி தொடங்கி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் “என்றும் ரஜினிகாந்த் தனது பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணியிலும் முழுமூச்சாக ஈடுபட்டார்.
. அவரது ரசிகர்களும் கட்சி உறுப்பினர் சேர்க்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
ஒரு அரசியல் கட்சிக்குரிய மருத்துவர் அணி,மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர்அணி என அனைத்தும் உருவானது.
இதன் பின்னர்தான் காட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன.
கடந்த 2020-ல் மார்ச் மாதம் லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,”முதல்வர் பதவி எனக்கு வேண்டாம் என்றும், `மக்கள் மத்தியில் எழுச்சி வந்த பிறகு அரசியலுக்கு வருவேன்’ என்றும் பேசினார்.
இது அவரது ரசிகர்களுக்கு அதிரடியான ஏமாற்றத்தைத் தந்தது.
அடுத்த சில மாதங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த ஓர் அறிக்கை என்று ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .அதை பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்று வழங்கியவர் ரஜினியின் நம்பிக்கைக்குரிய கராத்தே கற்றவர் என அப்போது சொல்லப்பட்ட்து.
ரஜினிகாந்த்,அதுபற்றி என்ன சொன்னார்?
சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்த அறிக்கை தன்னுடையது அல்ல .ஆனால்,அந்த அறிக்கையில் தனது உடல்நிலை குறித்துச் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிறகு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடமும் ஆலோசனை நடத்திய ரஜினி, “என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரமோ முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்” என்று சொன்னார் .
சொன்னதைப்போலவே அதே வருடம் டிசம்பர் 3-ம் தேதி அவரது முடிவைத் தெரிவித்தார். “வரும் 2021-ல் ஜனவரியில் கட்சித் தொடக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு” என்று ட்விட்டரில் அறிவிப்பையும் வெளியிட்டார்.
உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து, “எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், கொரோனா காலத்தில் மக்களைச் சந்திக்க வேண்டாமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் நான் சந்தோஷப்படுவேன். அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். அது காலத்தின் தேவை. அது இப்போ இல்லைன்னா… எப்பவும் இல்லை. எல்லாத்தையும் மாத்தணும்”என மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினார் ,நம்பினார்கள் மலை போல அவரை.!
`கட்சி அறிவிப்புக்கு முன்பாக தான் நடித்து வரும் `அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது என் கடமை”
. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாத மத்தியில், ஹைதராபாத்தில் நடைபெற்ற `அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ரஜினி.
கொரோனா விதிமுறைகளுடன் ஷூட்டிங் தொடர்ந்த நிலையில், படக்குழுவினர் சிலருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஓட்டல் ஒன்றில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார் ரஜினி.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானாலும், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
ஹைதராபாத்திலுள்ள அப்போலோவில், டிசம்பர் 25-ம் தேதி (2020) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ரஜினி.
மூன்று நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இதையடுத்துகடந்த 2020 டிசம்பரில்,தனது டுவிட்டர் பக்கத்தில்,இடி ,மின்னல்களை தொண்டர்களின் இதயங்களில் இறக்கினார்
`கட்சி தொடங்கவில்லை’ “பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என்கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இல்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று தெரிவித்தார் .
இதையடுத்து அவரால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன்உள்ளிட்ட பலர் வெளியேறினர்.அதைத் தொடர்ந்து நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், ரஜினியின் உடல் நலம் தேறி, கடந்த ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், கடந்த 19 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய அரசின் அனுமதியோடு ரஜனிகாந்த் அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்த பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
அவரது நடிப்பில் உருவாகி அண்ணாத்த திரைப்படமும் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்த நிலையில் உடனடியாக தனது மக்கள் மன்ற 38 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது மீண்டும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
,ரஜினி
சென்னை வந்து சேர்ந்த தமிழகம் முழுவதிலும் உள்ள 38 மாவட்ட செயலாளர்களும் தனியார் பேருந்தில் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
38 மாவட்ட செயலாளர்கள் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை முன்னதாக அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டது.
சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்பட்டு போதிய இடைவெளிவிட்டு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
இக்கூட்டத்தில் ரஜினிகாந்த், மக்கள் மன்றம் கலைப்பது குறித்தும் அதை ரசிகர் மன்றமாக தொடர்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கூட்டத்தின் முடிவில் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன், மக்கள் நலப் பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். நல்லதையே சொல்லியிருக்கிறார் கலைக்கப்பட்டதாக !
|