இளையதளபதி விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே அகில இந்திய இளையதளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸசி ஆனந்த் , நடிகர் விஜய் இந்த தேர்தலில் நடுநிலை வகிப்பதாக அனைத்து நகர மன்ற நிர்வாகிகளுக்கும் கூறியிருந்தார். தற்போது அவர் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்த கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைபாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே விஜய் யின் ரசிகர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்து கொள்கிறேன். இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,