“பாரத ரத்னா விருது எனது தந்தையார் என்.டி .ராமராவின் கால் நகத்துக்குச் சமம் ” என்று வாய்க்கொழுப்பெடுத்து பேசியிருக்கிறார் என்.டி ஆர்,பாலகிருஷ்ணா .!
ஆந்திர நடிகைகள் மட்டுமின்றி இதர மாநில நடிகைகளும் இவருடன் நடிப்பதென்றால் மறுத்து விடுவார்கள். அல்லது இயக்குநரின் உறுதி மொழிக்குப்பின்னர் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வார்.
அத்தகைய நடிகரான என்.டி.ஆர் பாலகிருஷ்ணா இன்று ஆந்திர தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் விஷம் கக்கியிருக்கிறார். இவர் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வும் ஆவார்.
1993 -ல் நிப்பு ரவ்வா என்கிற பாலகிருஷ்ணாவின் திரைப்படத்துக்கு பின்னணி இசை சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் யார் என்பதே பாலகிருஷ்ணாவுக்கு தெரியாது என்று சொல்வது திமிரின் வெளிப்பாடு.!
“எனக்கு ஏ.ஆர்.ரகுமான் யார் என்பது தெரியாது.அவர் ஆஸ்கார் வென்றிருந்தாலும் கூட அவர் யார் என்பது தெரியவில்லை.பத்து வருசத்துக்கு ஒரு தடவை ஹிட் கொடுப்பவர்..”
“பாரத ரத்னா என்பது என்னுடைய அப்பாவின் கால் நகத்துக்கு சமம் . என்னுடைய குடும்பம் தெலுங்கு திரை உலகுக்கு செய்திருக்கும் நன்மைக்கு எத்தகைய விருதுகளும் ஈடு ஆகாது” என்று சொல்லியிருக்கிறார் பாலகிருஷ்ணா .
இதே பாலகிருஷ்ணாதான் என்.டி.ஆரின் 21 ஆவது நினைவு நாளில் பேசும்போது “மறைந்த அமரர் ராமராவுக்கு ‘பாரதரத்னா ‘விருது கிடைக்க இந்திய அரசை ஆந்திர அரசு வற்புறுத்த வேண்டும் “என்று பேசியிருக்கிறார்.
“பாகுபலி ராஜமவுலியை பற்றி தமிழ் நடிகர் யாராவது பேசினால் ஆந்திராவில் சும்மா இருப்பார்களா?அப்பாவின் பேரை கெடுக்கிற கேவலமான ஆள்” என்று நெட்டிசன்கள் சினம் மிகுந்து சாடியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் தினா ,’சினிமா முரசத்திடம்’ கூறியதாவது ;
“உலகத்தின் சிறந்த விருதுகளில் ஒன்றான ஆஸ்கார் விருதை இந்தியாவுக்குப் பெற்று தந்தவர் ஏ.ஆர்.ரகுமான்.அவரை தெரியாது என்று சொல்வது வருத்தமளிக்கிறது.சினிமாவில் இருப்பவர் இவ்வாறு சொன்னது வேதனையாக இருக்கிறது”என்றார் தினா .