சென்னை அருகே மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து விபரம் வருமாறு
பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் காரில் செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி அருகே நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக கார் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார்.உடன் சென்ற அவரது 2 ஆண் நண்பர்களும் படுகாயமடைந்தனர். மேலும் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்