அடாவடி அழகி நடிகை மீரா மிதுன், தனது சமூக வலைத்தள கணக்குகளில் வம்புக்கிழுத்து வசை பாடி மாட்டிக் கொள்வது வழக்கம். அதிலும் முன்னணி நடிகர்களுடன் மோதினால் விரைவில் பெரிய ஆளாகிவிடலாம் என்கிற நினைப்பும் இருக்கும் போலிருக்கிறது. அவர்களது குடும்பத்தினரை இழிவு படுத்தி பதிவிடுவார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பேசி வெளியிட்டிருந்த காணொலியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவதூறாகப் பேசியிருந்தார். அதில் பட்டியலின மக்கள் தான் மோசமானவர்கள் , அவர்கள் தான் குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்று பேசியிருந்த காணொலி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை. அவர்தான் சூப்பர் மாடலாச்சே.!
சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டு சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.
” என்னைத் தாராளமாகக் கைது செய்து கொள்ளுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா என்ன? என்னைக் கைது செய்வது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும். பட்டியலின மக்கள் அனைவரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை. எனக்குத் தொந்தரவு கொடுத்தவர்களை மட்டுமே தவறானவர்கள் என்று கூறினேன்” என்று கூறியிருந்தார். பின்னர் ஆளை காணவில்லை.
கேரளா மாநிலம், ஆழப்புலாவில் உள்ள சுப்ரீம் ரிசார்ட்டில் மீரா மிதுன் பதுங்கியிருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி உத்தரவின்பேரில் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் காவலர்கள் கேரளாவுக்கு விரைந்து சென்று, ரிசார்ட்டில் இருந்த மீராமிதுனைக் கைது செய்தனர்.
காவல்துறையைப் பார்த்ததும் , ‘என்னைத் தொட்டால் என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வேன்’ என்று மிரட்டல் விடுத்து காணொலி வெளியிட்டார்.
மீரா மிதுனின் பேச்சுகளை காணொலியாகப் பதிவு செய்து வெளியிட்டது அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மீரா மிதுனைக் கைது செய்யும் போது, அவருடன் இருந்த அபிஷேக் ஷாமையும் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சாலை மார்க்கமாக நேற்று காலை சென்னைக்கு அழைத்துவந்தனர்.
மத்திய குற்றப்பிரிவு அலுலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பட்டியல் இன மக்களுக்கு எதிராக மோதலைத் தூண்டும் வகையில் பேசியது ஏன்? தொடர்ந்து காணொலி வெளியிட அவருக்குப் பக்கபலமாக இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? என்று விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம் அளிக்காமல் முரண்டு பிடித்து மீரா மிதுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் தான் பேசுவேன்’ என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், வழக்கறிஞர் வந்ததையடுத்து,கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.தற்போது 13 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.