இந்தியன்-2 பட விவகாரத்தில் அமைதியான முறையில் பிரச்சனையை பேசித் தீர்ப்பதற்காக இரு தரப்பினர் இடையே நட்பு ரீதியாக பேச்சுவார்த்தையை தொடங்கிய நாயகன் கமல் ஹாசனுக்கு ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையே வெற்றிக்கு வழிவகுத்து தந்து விட்டதாம். இயக்குனர் ஷங்கர்,லைகா சுபாஷ்கரன் இருவரிடையே தொடங்கிய பேச்சு வார்த்தை சுமூக நிலையை எட்டிவிட்டது.
இந்நிலையில் சென்னை வந்துள்ள லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரனை சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இயக்குனர் ஷங்கர் குடும்ப சகிதமாக சந்தித்து பேசியுள்ளார்.
இரண்டு குடும்பத்தினரும் மனம் விட்டு பேசியதில் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது என்கிறார்கள்.
சுமார் ஒருமணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து ஷங்கர் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற சுபாஷ்கரன் ஒப்புக்கொண்டதாகவும் அதேபோல் ’இந்தியன் 2’ படத்தையும் முடிக்க ஷங்கர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே விரைவில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள். ஷங்கர் தற்போது இயக்கிவரும் ராம்சரண் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.