பாபி சிம்ஹா, மோனிகா, லொள்ளு சபா சுவாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் நடித்திருக்கும் புதிய படம் “மீரா ஜாக்கிரதை”. இந்த திரைப்படத்தை எழுபது வயதான முன்னாள் ராணுவவீரர் R.G.கேசவன் இயக்க அவருடைய மகன் மகேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தினை M.அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது தணிக்கை குழுவினரின் சான்றிதழ் பெற்று மே 27, 2016 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் விளம்பரங்கள் சில நாட்களாக நாளேடுகளில் வெளியான சூழலில், அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி சிம்ஹா தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் தனக்கு அந்த படக்குழுவினர் யாரையும் தெரியாது என்றும், அவருடைய முந்தைய படமான “உறுமீன்” படத்தின் புகைப்படங்களை அனுமதியில்லாமல் விளம்பரங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் மீது குற்றம்சாட்டி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.பாபி சிம்ஹா. இது தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த புகார் தொடர்பாக “மீரா ஜாக்கிரதை” திரைப்படத்தின் இணை இயக்குனரும், இயக்குனர் கேசவனின் மகனுமான மகேஷை சந்தித்து கேட்டபோது,” பாபி சிம்ஹா “மீரா ஜாக்கிரதை” படத்தில் நடித்தது உண்மை. படத்தின் இரண்டாவது ரீல் முதல் க்ளைமாக்ஸ் உள்ள ஆறாவது ரீல் வரை அவர் காட்சிகள் உள்ளது.ஆனால் பாபி சிம்ஹாவோ என்ன காரணத்தினாலோ அவர் இப்படத்தில் நடிக்கவே வில்லை என்று ஒரு அப்பட்டமான பொய் புகாரை கூறியுள்ளார். பாபி சிம்ஹாவின் பொய் புகாரினால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு அவர் பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா? இப்படத்தில் அவர் சிவநேசன் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார். அவர் அப்போது நடிக்கும் போது அவருக்கு ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்பட்டது அது தான் அவரின் அப்போதைய மார்க்கெட் சம்பளம்.. “பாபநாசம்” படத்தில் வரும் ஒரு காட்சியை போல், பாபி சிம்ஹா தான் அதில் நடிக்கவில்லை என்று ஒரே பொய்யை பலமுறை சொல்லி உண்மையாக்க நினைக்கிறார். என ஆவேசமடைந்த அவர்,
இறுதியாக கூறுகையில், ‘இப்படத்தில் தான் என் வாழ்கையும், படக்குழுவில் உள்ள மற்றவர்கள் வாழ்கையும் அடங்கியுள்ளது.இப்படத்திற்காக தயாரிப்பாளர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். படம் வெளியாகவில்லை என்றால் தயாரிப்பாளரின் வாழ்கை நாசமாகிவிடும் . இப்படம் வெளி வராமல் தடை ஏற்ப்பட்டால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என ஆவேசத்துடன் கண்ணீர் மல்ககூறினார் இணை இயக்குனர் மகேஷ்.
சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது” திரைப்படத்திலும்பாபி சிம்ஹாவால் இதே போல் பிரச்னை ஏற்பட்டு, பின்னர் வேறு ஒருவரால் அவருடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசப்பட்டு அப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது