மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு என்று சொன்னார்கள்.
நடிகையர் திலகம் சாவித்திரியைப் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நமது எதிர்பார்ப்பு சரியாக இருந்ததா?
இல்லை !ஏமாற்றமாகவே முடிந்தது.
ஜெயாவின் வாழ்க்கையை சொல்வதாக இருந்தால் எம்.ஜி.ஆரை தொடாமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் இருந்தால் அங்கே ஆர்.எம்.வீரப்பனுக்கும் இடம் உண்டு. ஆகவே மூவரையும் இணைத்து கதை திரைக்கதை அமைத்து ‘தலைவி’யை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த புண்ணியம் விஜயேந்திர பிரசாத்துக்கு.! இவர்தான் பாகுபலியை வடிவமைத்தவர்.
கதாநாயகன் எம்.ஜி.ஆர். கதாநாயகி ஜெயலலிதா .வில்லன் ஆர்.எம்..வீரப்பன்.
வில்லன் மனம் திருந்தி மாறுவது சினிமா இலக்கணம்.அதை பிழையின்றி செய்திருக்கிறார்கள். முரண்பாடுகள் அதிகம். மறைக்கப்பட்ட பயோபிக்.சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த அந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப் படத்தில் இல்லை.அசல் ஜெயாவே அந்த ரிலேஷன்ஷிப்பை மறைக்கவில்லை என்கிறபோது இந்த ரீல் ஜெயா எதற்காக பயப்பட்டார்?
அச்சமுடன் படம் முழுவதும் பயணித்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். கார்க்கியின் உயிரோட்டமுள்ள வசனம் கதையை கவனிக்க வைக்கிறது. வீரப்பனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்த பனிப்போரினை உளுந்தவடை அதாவது ஓட்டை வடையை வைத்து எடுத்துக் காட்டப் பட்ட காட்சியில் காமடி இருக்கிறது. ஜெயாவின் வன்மமும் வெளிப்படுகிறது.கற்பனைதான் என்றாலும் சுவையான காட்சி.!
ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் .ஜெயாவின் தேக கட்டினை ஆரம்ப ஆட்ட பாட்ட காட்சியில் செயற்கையான மதர்ப்புடன் காட்டியிருக்கிறார்கள் .இதற்காக ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் டாப் ஆங்கிளில் கவனம் செலுத்தியிருக்கிறார் .
மிகுந்த பொருட்செலவு ,காட்சிகளில் இருக்கிறது.
கதையில் கவனிக்கத்தகுந்த கேரக்டர் ஆர்.எம்.வீரப்பன். சமுத்திரக்கனியின் முகம் அந்த கேரக்டரை பிரதிபலிக்கிறது. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் படுகிற அவதி. ஜெயாவை தவிர்ப்பதற்காக அவர் போடுகிற திட்டமெல்லாம் ஜெயாவின் சாமர்த்தியமான அணுகுமுறையினால் பணால் ஆவது சிறப்பு. எத்தகைய வன்மம் பிடித்தவர் ஜெயா என்பதை நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி ,ஜெயாவாக கங்கனா இருவரும் சுமாராகவே நடித்திருக்கிறார்கள். சசியாக வருகிற பூர்ணாவுக்கு போதிய காட்சிகள் கொடுக்கப்படவில்லை.