விஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘மருது’ .இப்படத்தை ‘குட்டிப்புலி’ ,’கொம்பன்’ படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்புசெழியன் தயாரித்துள்ளார்..
இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.
‘மருது’ படம் பற்றி விஷால் கூறும் போது, ராதாரவியுடன் இணைந்து நடித்தது உள்பட பலவற்றையும் பகிர்ந்து கொண்டார்.
இனி விஷாலுடன் பேசுவோம்!
‘மருது’ படத்தின் கதை?
‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நல்லதொரு கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அப்படி ஒரு படமாக அமைந்த கதைதான் ‘மருது. என் முந்தைய கிராமத்துப் படங்கள் ‘தாமிரபரணி’ ,’சண்டக்கோழி’ படங்களில் கூட நகரம் சார்ந்த சிலகாட்சிகள் வரும். வெளிநாட்டு பாடல் காட்சிகள் வரும்.இதில் அப்படி இல்லை. முழுதுமே கிராமம்தான். முத்தையா இந்தக் கதையைச் சொன்ன போதே கிராமம், காட்சிகள், என் தோற்றம், உடல்மொழி எல்லாமே மாறுபட்டதாக இருக்கும் என்கிற நம்பிக்கை வந்தது.
இது ஒரு பாட்டி பேரன் பற்றிய உணர்வு பூர்வமான கதை என்றாலும் ஒரு முழுமையான கமர்ஷியல் படத்துக்குரிய எல்லாமும் இருக்கும் .
படப்பிடிப்பு இடங்கள்?
இந்தக் கதைக்கு தேவைப்பட்டதாலும் இயக்குநரின் ஊர் என்பதாலும் ராஜபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
ராஜபாளையம் ஊர் பற்றி இண்டு இடுக்கு ,சந்து பொந்து எல்லாமும் முத்தையாவுக்குத் தெரிந்து இருந்ததால் ஒரு பிலிம் சிட்டியைப் போல அந்த ஊரை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினார்.
அந்த ஊர் மண், மக்கள் எல்லாமே எனக்குப் புது அனுபவமாகவும் மறக்க முடியாததாகவும் இருந்தது. அந்த ஊரில் 72 நாட்கள் வாழ்ந்தது அப்பப்பா மறக்க முடியாதது அவ்வூர் மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் பாசமும் ஆச்சரியப்பட வைத்தது.
ஒரு காட்சியில் நான் நடித்த போது எனக்குக் காலில் அடிபட்டு விட்டது. ஒரு அம்மா பதறிப் போய் என் காலை தன் மடியில் தூக்கி வைத்து நாட்டு மருந்துவ சிகிச்சை செய்தார். என் தரப்பினர் அதை வேண்டாம் ஏதாவது ஸ்பிரே அடிக்கலாம் என்ற போது ‘எங்க புள்ளைக்கு என்ன போடணும்னு எங்களுக்குத் தெரியும்’ என்று உரிமையோடு கூறியது நெகிழ்ச்சி அனுபவம்.
பொதுவாகப் படப்பிடிப்பு நடந்து முடிந்து வந்து விடடால் மீண்டும் அங்கு போக ஆர்வம் வருவதில்லை. ஆனால் அங்கு ஒரு பந்தம் ஏற்பட்டு விட்டது அதனால்தான் அங்கு ஏதாவது செய்யத்தோன்றியது கழிப்பறை இல்லாமல் சிரமப்பட்ட மக்களுக்குக் கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்தோம் .மீண்டும் அங்கே போக ஆசையாக இருக்கிறது. ராஜபாளையம் என்கிற ஊர் நாய்களுக்குப் புகழ்பெற்றது என்பார்கள். அழகான பெண்களுக்கும் ராஜபாளையம் பெயர் பெற்றது என்பேன். அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.
உடன் நடித்தவர்கள் பற்றி?
கதாநாயகி ஸ்ரீதிவ்யா. என்னுடன் அவர் நடிக்கும் முதல் படம் ‘மருது’ தான். அவருக்குப் பொருத்தமான வேடம் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
என் படங்களில் என் பாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போலவே எனக்கு எதிரியாக வரும் வில்லன் பாத்திரமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புவேன்.
இதில் வில்லனாக வரும் ஆர்கே சுரேஷ் ஒரு மனுஷனே கிடையாது. அவர் ஒரு பேய், ராட்சசன் என்று கூறலாம். அந்த அளவுக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். எங்கள் இருவர் சம்பந்தப் பட்ட காட்சிகள் நேஷனல் ஜியாகிரபி போல மிரட்டும்.
படத்தில் கிராமத்துப் பாட்டியாக மலையாள நடிகை லீலா நடித்திருக்கிறார்.
அவருக்கு இதுதான் தமிழில் முதல்படம். பிரமாதப் படுத்தியிருக்கிறார். நான்தான் கதாநாயகன், ஸ்ரீதிவ்யாதான் கதாநாயகி என்றாலும் பாட்டி பாத்திரம்தான் படத்தின் உயிர் என்று கூறுவேன்.
ராதாரவி அண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சூரியுடன் நான் நடித்துள்ள 4வது படம் இது. சூரி இதில் மாறுபட்ட பாத்திரத்தில் வருகிறார் இயக்குநர் மாரிமுத்து கதாநாயகியின் அப்பாவாக வருகிறார். நமோ நாராயணன் ,அருள்தாஸ் போன்றோரும் நடித்துள்ளார்கள்.
ராதாரவியுடன் நடித்தது பற்றி?
முத்தையா என்னிடம் கதை சொன்ன போது அந்தப் பாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் உங்களுக்கு எப்படி என்று தயங்கியபடி கேட்டார். இதை ஏன் கேட்கத் தயக்கம்? யார் தேவையோ அவர்களை நடிக்க வையுங்கள் தயங்காதீர்கள் நடிக்கட்டுமே ,என்றேன். இதுவரை நாங்கள் இணைந்து நடித்ததில்லை நடிக்கட்டுமே என்றேன்.
நடிகர் சங்க தேர்தல் பிரச்சினையில் அவர் எதிர் தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவதும் அவர் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்பதும் முட்டாள்தணம் என்பேன்.நடிகர் சங்க தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார்,நான் ஒரு கோணத்தில் நின்றேன் அவ்வளவுதான்.
அவர் என் படத்தில் நடிப்பது பற்றி படக்குழுவுக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கும் கூட எதிர்பார்ப்பு பரபரப்பு இருந்தது.. நாளைக்கு வருகிறார். இன்றைக்கு வருகிறார் என்ன நடக்கப்போகிறதோ என்று எதிரிகளைப் போல விறுவிறுப்பு காட்டினார்கள். ராதாரவி அண்ணன் வந்தார் நடித்தார். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர்.
சங்கம் வேறு ; நடிப்பு வேறு. சங்கம் வேறு;தொழில்வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். ‘இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் சொல்லுப்பா செய்றேன் ‘என்றார் அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக் குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை.
தொழில்நுட்பக் குழுவினர் பற்றி..?
முத்தையா உணர்வு பூர்வமாக கதை சொல்வதில் திறமையானவர். அவர் சொன்ன கதை பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். அவர் எழுதும் வசனம் சக்தி மிக்கதாக இருக்கும். அழுத்தமாக இருக்கும். .இன்று கிராமம் பற்றி சினிமா எடுக்க ஆளில்லை. அவர் கிராமம் பட்டுமே தனக்குத் தெரியும் என்பவர் அவர் வாழ்வில் நடந்த பல அனுபவங்களை இதில் வைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முத்தையாவுக்கு ஏற்ற பெண்பாட்டி போல இருப்பவர்.அவர்களுக்குள் அவ்வளவு பொருத்தம்.இமானின் இசையில் தொடர்ந்து எனக்கு ஹிட் பாடல்கள் அமைந்து வருகின்றன. இதிலும் அப்படி உள்ளது
.’ மருது’ படம் மே 20 -ல் வெளியாகிறது. இது நிச்சயமாக எனக்கு திருப்தியான படமாக இருக்கும்.பார்ப்பவர்களுக்கும் திருப்தியான மகிழ்ச்சியூட்டும் படமாக இருக்கும்.