அமேசான் பிரைம் வீடியோ, 2டி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை, நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகிறது. இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம்.
மனிதநேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார், ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.
இதுதொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உள்ளடக்க தேர்வுக்குழு தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில்,’ ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் இதய பூர்வமான மனிதர்களின் உணர்வுகளை சொல்லும் கதை. சூழலுக்கேற்ற நகைச்சுவையுடன் கூடிய இப்படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி முதல் வெளியீடாக ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ வெளியாகிறது,என்றார்
படத்தைப் பற்றி இயக்குனர் அரிசில் மூர்த்தி பேசுகையில்,‘ இந்த திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர். படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார்
தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில்,’ ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.