
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது எந்த நிகழ்ச்சிக்கும் சென்றாலும் மாஸ்க் போடச்சொல்லி வற்புறுத்தி வருகிறார். மாஸ்க் போடவில்லை என்றால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதாகவும் பயமுறுத்துகிறார்.
இவரது படமான ‘நான் கடவுள் இல்லை ‘என்கிற படத்தின் முன்னோட்ட விழா நடந்தபோது கம்பெனி செலவில் மாஸ்க் கொண்டு வந்திருந்தார். மாஸ்க் போடாதவர்க்கெல்லாம் இலவச விநியோகம்.
ஆனால் ஒரு சோகம்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக விஜய் ஆண்டனி அழைக்கப் பட்டிருந்தார். இவர்க்கு கடுமையான ஜூரம் .100க்கும் மேலே.103 டிகிரி வரை இருக்கும் என்பதை சந்திரசேகரே சொன்னார்.
ஜூரம் உள்ளவர்களை பொது நிகழ்ச்சிகளில் அனுமதிக்கக் கூடாது என்பது அரசாங்க அறிவுரை.வாசலிலேயே செக் பண்ணிதான் அரங்கத்துக்குள் அனுமதிப்பார்கள். இந்த விதி முறை பிரசாத் லேப் தியேட்டரில் பின்பற்றப்படுகிறது.
ஆனால் எப்படி சோதனை செய்யாமல் விஜய் ஆண்டனியை அனுமதித்தார்கள்.?
இயக்குநர் எஸ்.ஏ.சி .எப்படி விஜய் ஆண்டனியை அனுமதித்து மேடையில் அமர வைத்தார்.
அவருக்கு காய்ச்சல் என்று எஸ்.ஏ.சி .மைக்கில் சொன்னதும் மேடையில் அமர்ந்திருந்த அவரது உறவினர் பிரிட்டோ நெளிந்ததை பார்க்க முடிந்தது.
சட்டத்தையும் சமூக நீதியையும் தன்னுடைய படங்களில் வற்புறுத்துகிற எஸ்.ஏ.சி .செய்தது நியாயமா?
சரி நிகழ்ச்சியை பார்க்கலாம்.
எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘நான் கடவுள் இல்லை’ . இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேலும் பேசும்போது,
“இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனிக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல். பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கிறார் .
அவர் ஒரு இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி .எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர். முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர். அவர் இங்கே வந்திருப்பது அந்த நம்பிக்கையே இங்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.
எப்போதும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் “சூப்பர் சார் “என்பார். அவரது படம் நாளை வெளியாக இருக்கிறது .அந்த பரபரப்பான நிலையில் இங்கே வந்திருக்கிறார்.
சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் .அவர் ஒரு இயக்குநராக நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் .அவரிடம் இந்தக் கதையை சொல்லி நான் விவரித்தபோது ,”அதெல்லாம் விரிவாக பேச வேண்டாம்.நான் உங்கள் படத்தில் இருக்கிறேன்” என்று சொன்னார் . அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
படப்பிடிப்பில் இன்னொரு டேக் என்று நான் சொல்வதற்கு முன்பாக அவர் தயாராக இருப்பார். நான் அவரிடம் கேட்பதற்கு யோசனையாக இருக்கும் போதே ,உடனே அடுத்த டேக் போகலாமா என்று மீண்டும் நடிக்க வேண்டுமா என்று கேட்டு நடித்துக்கொடுத்தார். உங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சர்வ சுதந்திரம் கொடுத்தார். ஓர் இயக்குநருக்கு அதைவிட வேறென்ன வேண்டும்’? நான் இத்தனை படங்கள் எடுத்து இருந்தாலும் , எண்ணிக்கை முக்கியமல்ல .அவரது படங்கள் சிறப்பானவை.அவரை எப்படி வேலை வாங்குவது என்று ஆரம்பத்தில் பயந்தேன் .ஆனால் அவர் இயக்குநரின் நடிகர் ஆகிவிட்டார்.
கதாநாயகிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை .நடித்து விடுவதோடு சரி. இந்த டப்பிங் பேசவோ ப்ரமோஷன் செய்யவோ வரமாட்டார்கள். அதுதான் அவர்களது போக்காக இருக்கிறது. ஆனால் என்னுடைய கதாநாயகிகள் இனியாவும் சரி சாக்ஷி அகர்வாலும் சரி அப்படிப்பட்டவர்கள் அல்ல.நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இந்தப் படத்தின் விழா என்று சொன்னதும் ‘அடுத்த படத்தின் படப்பிடிப்பை இங்கேயே தொடங்கி விடலாமா?’ என்று சாக்ஷி அகர்வால் கேட்டார். அப்படிப்பட்டவர்கள்தான் என் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இங்கே வந்துள்ள கலைப்புலி தாணுவிடம் எப்போது பேசினாலும் “எங்கே வர வேண்டும் ?எப்போது வரவேண்டும் ?”என்று கேட்பார்.’ துப்பாக்கி’ படத்தை முதலில் நாங்கள் தொடங்கினோம். தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாமல் அவரைக் தயாரிக்கச் சொன்னேன் .அந்தப் படத்தை பெரிய அளவில் வணிகம் செய்து பெரிய படமாக அவர் தயாரித்தார் .அதற்குப்பிறகு விஜய்யின் வணிக மதிப்பு பெரிய அளவில் மாறியது.
இங்கே இயக்குநர்கள் இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் .உண்மைகளைப் பேச வேண்டும் ,அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தயங்கக் கூடாது .நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன் ,தைரியமாக உண்மையைப் பேசுங்கள். தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள் .எல்லா இயக்குநர்களும் தைரியமாக இருக்க வேண்டும். சமூக சிந்தனையுடன் இருக்க வேண்டும். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும்.
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் மனிதராக இருக்க வேண்டும். சமுத்திரக்கனி ஒரு நல்ல மனிதராக இருப்பவர். என்னைப்போலவே சமூகக் கோபம் கொண்டவர்.மனித நேயம் மிக்கவர், பணமெல்லாம் அதற்குப்பிறகுதான் என்று இருப்பவர் .இப்படத்தின் மூலம் நல்ல மனிதர்களுடன் பயணம் செய்த உணர்வு எனக்கு உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன் விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று .விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன் .ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் சிலர் யாரோ உட்கார்ந்து கொண்டு விஜயின் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம். பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டி தான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள். மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் .பொய் சொல்லாதீர்கள் . தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசாதீர்கள்.
உடனே அப்பா பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம் எங்களுக்குள் சண்டைதான். இதுஎல்லா குடும்பத்திலும் நடப்பது தான் .குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானதுதான்.
விஜய் ரகசியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள் .விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் .இதைப் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய் வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நல்ல மேடை நல்லதைச் சொல்வோம் .அன்பை விதைப்போம் .அன்பை அறுவடை செய்வோம்”இவ்வாறு இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.
இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது,
“இந்தப் படம் பற்றிய அனுபவம் பெரிய மறக்கமுடியாத பயணமாக எனக்கு இருந்தது .முதலில் இயக்குநர் எஸ்.ஏ.சி சார் என்னுடன் பேச வேண்டும் என்று நண்பர் கூறிய போது, கொரோனா காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டியதுதானே என்று நான் நினைத்தேன் .ஆனால் அவர் உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்றார் சொன்னால், அங்கேதான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார். அவ்வளவு சுறுசுறுப்பானவர் .அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்துவிட்டார். அவரைப் பார்க்கும்போது கண்டிப்பாக நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும்குணம் தெரிந்தது. அதைப் பார்க்கும்போது என் குருநாதர் பாலச்சந்தர் சார் நினைவில் வந்தார் .
பெரிதாகச் சாதித்தவர்கள் அனைவரும் நேரத்தை மதித்தவர்களாக இருந்திருப்பார்கள். என் குருநாதர் என்னிடம் சொல்வார் எங்கே போனாலும் பத்து நிமிடம் முன்பாகப் போய்ச் சேர். அது உன் வாழ்க்கையை மாற்றும் என்பார். எஸ்.ஏ.சி. சாரிடம் என் குருநாதரைப் பார்க்கிறேன்.”என்கிறார் கனி.