கோடியில் ஒருவன். (விமர்சனம்.
———————-
எழுத்து ,இயக்கம் :அனந்த கிருஷ்ணன். ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார் .இசை :நிவாஸ் கே.பிரசன்னா.
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா ,ராமச்சந்திர ராஜு, சச்சின் கேட்கர் ,சூப்பர் சுப்பராயன், பூ ராம்.
——————————————————————————-
கம்பம் அருகே அழகிய மலை கிராமம் .மனிதர்களால் கற்பழிக்கப்படாத இயற்கை வளம் நிறைந்து இருக்கிறது.
ஆனால் அரசியல்வாதி பூ ராமினால் மனிதர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கட்டளைக்கு இணங்காத மனிதர்களை வன்முறைக்கு இரையாக்கி மகிழ்வது பூராமின் குணம்.
நிறை கர்ப்பிணி என தெரிந்திருந்தும் திவ்ய பிரபாவை உயிருடன் கொளுத்தச்சொல்லி பூ ராம் தனது அடியாட்களுக்கு உத்திரவிட அவ்விதமே நடக்கிறது.
ஆனால் எரிந்தும் எரியாத பாதி நிலையில் உயிர் தப்புகிற திவ்ய பிரபா ஆண்குழந்தையை பெற்றெடுக்கிறார்.
அந்த குழந்தைதான் கோடியில் ஒருவன் என்பது சொல்லாமலே தெரிந்து விடுகிறது.
மகன் விஜய் ஆண்டனியை கலெக்டராக பார்க்க அம்மா திவ்ய பிரபாவுக்கு ஆசை.
அம்மையின் ஆசையை நிறைவேற்ற உயர் படிப்புக்காக சென்னை செல்கிற விஜய் ஆண்டனி கலெக்டர் ஆகிறாரா ,இல்லையா என்பதுதான் ‘மெட்ரோ’ படத்தை தந்த இயக்குநர் அனந்த கிருஷ்ணனின் எஞ்சிய கதை.
தற்கால அரசியலை முழுமையாக கையில் எடுத்திருக்கிற இயக்குநர் மாநகராட்சியில் நடக்கிற லஞ்ச லாவண்யத்தை மையமாக வைத்து கதையை கொண்டு சென்றிருக்கிறார்.
முழுமையுடன் பிரகாசிப்பது சூப்பர் சுப்பராயன்தான் ! கமிஷன் கரப்ஷன் ராஜா!
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் கேவலமான நிலையை பிரதிபலித்திருக்கிறார்கள். ஆனால் அதையே பல முறை காட்டவேண்டுமா என்ன?
ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளராக ராமச்சந்திர ராஜு. கச்சிதமான தேர்வு.
பூ ராம் .கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். உருக வைக்கும் ஆற்றல் உள்ள மனிதர் .இந்த கதையில் நம்மை திகைக்க வைத்திருக்கிறார் ,தனக்கும் வில்லத்தனம் கைவருமென்பதை காட்டியிருக்கிறார்.
நாயகியாக ஆத்மிகா .கட்டிப்புரண்டு காதலனுடன் கூடிக் களிக்கக்கூடிய ஆற்றலும் தேகக்கட்டும் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் கண்ணைப்பார்க்க ,புன்னகை பூக்க மட்டுமே வாய்ப்பு. புத்தருடன் டூயட் பாட முடியுமா என்ன?
நாயகனாக விஜய் ஆண்டனி. முதல் படத்திலிருந்து இந்த படம் வரை மனிதர் மாறவில்லை. கொஞ்சம் நடிங்க பாஸ்.!
குடிசை வாழ் மக்களின் அமோக ஆதரவு பெற்று அவர்களின் பிரதிநிதியாக உயர்ந்துள்ள விஜய் ஆண்டனியை தன்னுடைய கட்சிக்குள் கொண்டுவருவதற்கு ராமச்சந்திர ராஜு தலை கீழாக நின்று தவம் செய்து பார்த்தும் பயனில்லை.
திவ்யபிரபாவை ராமச்சந்திர ராஜு தன்னுடைய கஸ்டடிக்குள் கொண்டு வந்து ஆண்டனியை மிரட்டினால் அவர் கட்சி மாறமாட்டாரா என்ன , ?
இப்படி ஒரு கேள்வி படம் முடிந்ததும் எழுகிறது.
கோடியில் ஒருவன் இரண்டாவது பாகமும் வருகிறதாம்!
ரசிகர்கள் பொறுமைசாமிகள்.!