கதை,இயக்கம்:அரிசில் மூர்த்தி , ஒளிப்பதிவு : சுகுமார் , இசை: கிரிஷ் .
மிதுன் மாணிக்கம் ,வடிவேல் முருகன், ரம்யா பாண்டியன் ,வாணி போஜன் .
தயாரிப்பு: ஜோதிகா- சூர்யா .
பட்டண வாழ்க்கையையே பார்த்து,பார்த்து பழகிப்போன கண்களுக்கு, கட்டாந்தரை,கருவேல முள்ளு பூமியும் ,அங்கு வாழ்கிற வறுமைக்குப் பொறந்த மனுசங்களும் ரொம்பவே வித்தியாசமா இருக்காங்க. ஆனா அவங்கதான் அசல்.!வெள்ளந்தியான ஆளுங்க வாழ்ற வானம் பார்த்த பூமி. அப்பாவிகளை எப்படியெல்லாம் படிச்ச வர்க்கமும் ,அதிகார வட்டமும் ,அரசியல் கூட்டமும் ஏமாத்திட்டிருக்காய்ங்க என்பதை நெத்திப் பொட்டில் அடிச்சி சொல்லியிருக்கிறார் டைரக்டர் அரிசில் மூர்த்தி. கேள்விப்படாத பேரு !ஆனா நிறையப் பேரை பேச வைப்பாரு .
எந்தெந்த கட்சிக்காரய்ங்க வைய்யப் போறாய்ங்கன்னு தெரியல. அதிலும் டார்க் கலர் சட்டையைப் போட்டுக்கிட்டு குரல் ஒசத்திப் பேசுறார் ஒருத்தர் ! சிரிக்காம இருக்க முடியலை .! சீமான்னு சொல்றாங்க !! ஆனா எந்த கட்சியையும் மூர்த்தி விட்டு வைக்கல. மீடியா ஆளுங்க ஒவ்வொரு ஆளா அவருக்கு அல்வா கொடுக்கிற சீன் ..
அனுபவிக்கனும்ங்க !!
தெக்கித்தி சீமையிலே ஏனாதிக்கு பக்கத்தில இருக்கிற ஊரு . காரை வீட்டை பாக்க முடியல. மண்ணு சுவரு ,ஓட்டு வீடு .கரம்பை மண்ணு தூசி படிஞ்ச வேட்டியும் சேலையுமா இந்நாட்டு மன்னர்கள்.தலைக்கு எண்ணெய் இல்லை.கருவேல முள்ளுக்காட்டுக்குள்ள வாழுற ஜீவன்களின் கதை.
கருப்பன் ,வெள்ளையனை காணோம்னு குன்னிமுத்து போலீஸ் டேசன்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறதில இருந்து கத ஆரம்பமாகுது. பிள்ளைகளை காணோம்னு இவ்வளவு உருக்கமா கொடுக்கிறானே ,ரொம்பவும் அப்பிராணியா இருக்கானேன்னு நினைக்கிறப்பதான் மாடுகளைத்தான் அப்படி குன்னி முத்து சொல்றான்கிறது அப்புறம்தான் தெரியிது .
“எம்.எல்.ஏ வீட்டு நாயைக் காணாம் ,மந்திரி செருப்பை காணாம்னு தேடி அலையிற போலீசுக்கு நம்ம வீட்டு மாடுகளை தேடுறதுக்கு எங்கேய்யா நேரம் இருக்கப் போகுது”ன்னு வீராயி ( ரம்யா பாண்டியன்.) விடுற வெடப்பாரம் செமயா இருக்கு. காணாம போன மாடுகளை தேடி அலையிற படலம்தான் மொத்த கதை.
சீதனமா வந்த கன்னுக்குட்டிகளை பிள்ளைக மாதிரி வளர்த்த குன்னி முத்து குடும்பத்துக்கு பிள்ளை இல்லையேங்கிற கவலை கொஞ்சம் கூட இல்ல. குன்னிமுத்துவா நடிச்சிருக்கிற மிதுன் மாணிக்கம் ,இவரின் மனைவியா நடிச்சிருக்கிற ரம்யா பாண்டியன் ரெண்டு பேருமே ரொம்பவும் இயல்பா இருக்காங்க. இந்த மாதிரி குடும்பம் அமையிறது ஆச்சரியம்தாங்க .
குன்னி முத்துவ மையமா வச்சு சம்பவங்களை ரசிக்கும்படியா எடுத்திருக்காங்க. அதில் கலந்திருக்கிற அரசியல் ,ஊழல் , அதிகார அத்துமீறல் அத்தனையும் நம்ம நாட்டு நடப்புங்க. ஏண்டா இப்படியெல்லாமா ஏமாத்தி கொள்ளையடிச்சிருக்கீங்க. வாடகைக்கு மாடுகளை புடிச்சி அதை விவசாயிகளுக்கு இலவசமா கொடுக்கிறன்னு சொல்றதெல்லாம் மோசடிதானா?
இப்படித்தான் குளம் வெட்டுன கணக்கு ,கக்கூஸ் கட்டுன கணக்கு ,பள்ளிக்கூட கட்டிட கணக்கு இப்படி அரசாங்க திட்டங்கள்ல சுவாகா பண்ணுனதுன்னு கதையில நீதி விசாரணை பண்ற அளவுக்கு மேட்டர் இருக்கு.
இடைவேளைக்கு அப்புறமா வர்ற சீன்லாம் ஏற்கனவே ஒரு இந்தி படத்தில வந்தது மாதிரி இருக்கு.!அந்த கிராமத்துக்கு மீடியாக்கள் எடுக்கிற படையெடுப்பு அந்த பாதிப்புதான்! மீடியாக்களின் பம்மாத்து வேலைகளையும் சூடாத்தான் காட்டுறாங்க. !
கதையில் செட் பிராப்பர்ட்டி மாதிரி குளம் வெட்டுற கிழவர் ,கிராமத்து சாவடியில் தூங்கி வழியிற தொப்பை ஆளு .இவங்களும் முக்கியமான கேரக்டர்கள்தான்.!.. ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லன்னு உறங்குற அந்த சாவடி தூங்கு மூஞ்சிதான் டைட்டில் ஆளு.!
மீடியா வாணி போஜன் இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் நல்ல கேரக்டர்தான்.!
மாடுகளுக்கு காதில் துளை போட விடாம தடுக்கிற குன்னிமுத்து எப்படி காயடிக்க விட்டாரு. லாடம் கட்டுறத்துக்கு சம்மதம் சொன்ன ஆளு ,சொசைட்டி டாக்டர் மாட்டுக்கு துளை போட்டா மட்டும் தனக்கு துடிக்கும்கிறது நெருடலா இல்லிங்களா ?
ஆடம்பர கார்ல வந்த விவசாய சங்கத்தலைவரு சட்டுன்னு அரை நிர்வாண பக்கிரியா மாறி அனுதாபம் தெரிவிக்கிற மோசடி அரசியல் ..யே அப்பாடி விவசாயி.! ஏன்யா இப்படியெல்லாமா குண்டு மாத்து குழி மாத்து வேலையெல்லாம் பண்ணுவாய்ங்க.!