ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் ஜி .மோகன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கவுதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,”
“நான் டப்பிங் யூனியன் தலைவராக பணியாற்றி வருகிறேன்.தற்போது திரையுலகில் பெரிய பெரிய இயக்குநர்கள் தங்களை உறுப்பினர்களாக சேர்க்க சொல்லி என்னை சந்திக்கிறார்கள். அவர்களும் டப்பிங் யூனியனில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு சினிமாவைத் தவிர வேறு தொழில் தெரியாது.
ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நான் வணங்கும் தலைவர்களில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அவர் இந்தியாவிற்கான அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். அவர் ஒரு ஜாதிக்காக இதனை செய்யவில்லை. இதை சொல்வது தான் ருத்ர தாண்டவம் படம்.
நான் ஒரு திறமையான நடிகன் இதனை சொல்லி சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டேன் இனிமேல் சொல்வதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். ஏனெனில் திரை உலகில் காகித பூக்களுக்கு தான் மரியாதை. உண்மையான வாசம் வீசும் மலருக்கு மரியாதை கிடைப்பதில்லை. ஊடகவியலாளர்கள் நினைத்தால் நன்றாக இருக்கும் ஒருவரை கூட ஆட்டோ சங்கர் ஆக மாற்றிவிட முடியும் நீங்கள் நினைத்தால் ஆட்டோ சங்கரை கூட சாய்பாபாவாக மாற்றிவிட முடியும்.
இந்த பட விழாவுக்கு வந்திருந்த நடிகர் ரிச்சர்ட் தலையைக் காட்டிவிட்டு திரும்பி விட்டார் என்றார்கள் .ஹீரோ ஹீரோயின்கள் புரமோஷன்களுக்கு வருவதில்லை .பாவம் அவர் என்ன பண்ணுவார்.!”என்றார்
படத்தின் இயக்குனர் மோகன்ஜி பேசுகையில்,”
“திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. திரௌபதி படத்தின் பட்ஜெட் 45 லட்சம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்தி மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. முன்னணி நடிகர்கள் இருவர் கூட நல்ல ஊதியத்தில் படங்கங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள். பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன்.
ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிருத்துவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார். அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார்,
சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார்.
இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்துவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்துவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். இதுதான் ருத்ரதாண்டவம் உருவான கதை.
அண்ணன் ராதா ரவி தயார் என்றால், அவரை கதையின் நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன். என்னிடம் அதற்கான கதை இருக்கிறது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கதையை தயார் செய்து வைத்திருக்கிறேன். தயாரிப்பாளருடன் அவர் வந்தால் அவரை கதையின் நாயகனாக வைத்து இயக்குவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.”என்றார் .
இதற்கு ராதாரவியும் “நடிப்பதற்கு தயார் “என்றார்.
“திருமாவளவனை சொல்கிறீர்களா “என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பெயரை குறிப்பிட்ட மறுத்து விட்டார் மோகன். ஒரு கோரிக்கையை சொல்வதாக இந்த மேடையில் ஒன்றினை சொன்னார்..
” நீங்கள் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய மதத்தை பற்றியோ.. என்னுடைய சமூகத்தைப் பற்றியோ.. ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம்பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்து விடுவேன். அதனால் மற்றவர்களை காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”என்றார் .