ரிஷி ரிச்சர்டு ( ருத்ர பிரபாகரன் ), தர்ஷா குப்தா ( வராகி ), ராதாரவி ( இந்திரசேனா ), கௌதம் வாசுதேவ் மேனன்(வாதாபி ராஜன் ),ஒய்.ஜி .மகேந்திரன் ( ராமச்சந்திரன் ), மாளவிகா அவினாஷ் ( நீதிபதி ), தம்பி ராமைய்யா ( ஜோசப் முரே ), தீபா ( அன்னலட்சுமி ),
ராம்ஸ் ( ரேஞ்சர் ரவி ), கோபி ( அண்ணாமலை ஐ.பி.எஸ்.),மனோ பாலா, இளங்கோ, காக்காமுட்டை விக்கி ( மாறன் ) லிங்ககேஷ் கார்த்தி ( மதி )
ஒளிப்பதிவு – பரூக்.ஜே. பாஷா , இசை – ஜூபின்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜி.மோகன்.
##################
விவகாரமான கதை என்கிற முத்திரையை முன்னுரிமையாகக் கொண்டு விளம்பரங்களைத் தேடிக்கொண்ட படம். இந்த ‘ருத்ர தாண்டவத்துக்கு’ எதிர்ப்பு என்பது வலிந்து தேடிக்கொண்ட விளம்பர உத்தி என்பதாகவே தெரிகிறது படத்தைப்பார்த்த பிறகு.!
கதையை எழுதி இயக்கியவர் பிஜேபியின் ஆதரவாளர் என்பதால் எச்.ராஜா உள்ளிட்ட வில்லங்க அரசியல்வாதிகளை படம் பார்க்க வைத்து, வேண்டுமென்றே பத்திரிகையாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தில் அரசியல் பேசப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாதாபி ராஜன் என்கிற கவுதம் வாசுதேவமேனனின் கேரக்டரே முழு அரசியல்தானே!இவருக்கான கேமரா ஆங்கிள்களில் காட்சிகள் அமையவில்லை. ராதாரவியையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.
சிறப்பாக நடித்திருப்பவர்களில் முதலிடம் தம்பி ராமையாவுக்கும் ,தீபாவுக்கும் !.! எந்த கேரக்டராக இருந்தாலும் அதை முழுமையாக உள்வாங்கி நடிப்பவர் தம்பி ராமையா.அடுத்து ரிச்சர்ட் .
இயக்குநருக்கு பிடிக்காதவர்களை கடுமையுடன் சாடுவதற்கும் ,தமிழீழப் போராளிகளுக்கு போதை மருந்து கடத்துகிறவர்கள் என்கிற முத்திரையை குத்துவதற்கும் அந்த கேரக்டர் பயன்படுகிறது. பொதுவாக இந்தப்படத்தில் முற்போக்கு சக்திகளை வில்லனாக சித்தரித்திருக்கிறார்கள் என்பதாகவே தோன்றுகிறது. கதாநாயகனின் பெயரில் ‘பிரபாகரனை’ இணைத்துக்கொண்டிருப்பது உள்நோக்கத்துடன் தானே!
கதையின் நாயகன் ருத்ரபிரபாகரனுக்கு தொடர் தோல்விகள் தான்.ஏனென்றால் அவர் ரொம்ப நல்லவர் .! குற்றவாளிகளின் தண்டத்தொகையை அவரே கட்டிவிடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் கதாநாயகனை தொடர்ந்து தோற்கடிக்க மாட்டார்கள். அந்த உச்சக்கட்ட காட்சியில் கூட நீதி மன்றத்தில் வெற்றி பெற முடியாததால்தானே வாதாபியை நாயகன் ரிச்சர்ட் கொலை செய்கிறார் ? ஆனால் அந்த பெருமையைக்கூட தீபா (அன்னலட்சுமி .) தட்டிச்சென்று விடுகிறார்.செய்யாத கொலையை தீபா ஏன் சுமக்கிறார்? ரிச்சர்ட்தான் கொலை செய்தார் என்பது தீபாவுக்கு தெரிந்ததால்தான் அவரை காப்பாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்பதாக வைத்துக்கொண்டால் அந்த கொலை நடந்தது அவருக்கு எப்படி தெரிந்தது??
இந்த படத்தில் கண்களை கலங்க செய்த பெருமை சின்னத்திரை தீபாவுக்கே சேரும். அவர் செய்த 3 கொலைகளைப் பற்றி நீதிபதியிடம் சொல்கிறபோது நமது மனம் கனத்தது.
படத்தின் நீளம் அதிகம் . 168 நிமிடங்கள்.! இடுப்புவலிதான் மிச்சம்.
மதம் மாறிய தலித்துகள் சொந்த சாதியின் அடிப்படையிலான சலுகைகளை அனுபவிக்கக் கூடாது என்பதை (க்ரிப்டோ கிறிஸ்டியன்) வலியுறுத்துவதாக அமைக்கப்பட்ட காட்சிகள் புதிது. ஆனால் பொறுமையை சோதிக்கின்றன. சாதியை மையமாக வைத்து காட்சிகள் அமைந்திருக்கின்றன. போனஸாக இந்த படத்தில் மதமும் இழுக்கப்பட்டிருக்கிறது.அதிக அளவில் பல விதமான கருத்துகளை தொட்டிருக்கிறார்கள் . அதிக சுமை.ஓவர் லோடு.!! இதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனரா என்பதை படத்தின் வெற்றிதான் முடிவு செய்யும்.சாதி,மதம் எந்த அளவுக்கு இந்த படத்தை தூக்கி நிறுத்தும் என்பது தெரியவில்லை.
பின்னணி இசை படத்துக்கு ஒத்துழைக்கவில்லை.
ருத்ரதாண்டவம் —எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.!