கதை ,திரைக்கதை ,வசனம் ,பாடல்கள் ,இசை ,இயக்கம் ,தயாரிப்பு :ஹிப்ஹாப் தமிழா ஆதி.
ஆதி ,மாதுரி ,இளங்கோ குமணன், ஆதித்யா கதிர் ,’யூ டியூப் பிராங்ஸ்டர் ‘ராகுல் ,விஜய் கார்த்திக் .
ஒளிப்பதிவு ;அர்ஜுன் ராஜா ,வசனம் “ஹிப் ஹாப் ஆதி ,பாலசிங்காரவேலன்,
############
ஹிப் ஹாப் ஆதியின் படங்களுக்கு இளைய தலைமுறையினரின் வரவேற்பு சிறப்பாகவே இருக்கும். இந்த படத்துக்கு அதிகாலை காட்சி இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளலாம். இதனால்தானோ என்னவோ துணிவுடன் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார் ஆதி.
“மூன்றாம் பிறை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து கலங்கிய என்னை இந்த படத்தின் கிளைமாக்ஸும் கலங்கடித்து விட்டது” என்று சத்யஜோதி தியாகராஜன் சொன்னதை மறக்காமல் கிளைமாக்ஸை பார்த்தால் …….?
அது அவரது ‘வஞ்சப் புகழ்ச்சி ” என்பது புரிந்தது. ஆம் அவர் ஒரு தீர்க்கதரிசி.!
ஆதியின் இந்த கதை அவர் காஞ்சிபுரத்துக்கு சென்றிருந்த போது உதித்தது என்பதை ஆதியே சொன்னதுதான்.. ஆனால் ,
அவரது கற்பனை படமாக பார்ப்பதற்கு உரியதுதானா? ‘குமுதத்தில்’தொடராக எழுதியிருக்கலாம் சார்.!
காஞ்சிபுரம் கடவுளர்களுக்கும் ,அரச வம்சத்தினருக்கும் மட்டுமே நெய்யக்கூடிய தறி. அதில் அமர்ந்து நெய்கிற உரிமையும் தகுதியும் உள்ள ஒரு நெசவாளர். நெய்யப்பட்ட சேலையின் மதிப்பு பல லட்சம் வரை போகும் , அந்த சேலையை வின்டேஜ் -அரச பட்டு என்பார்கள். இந்த நெசவாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆகாத வில்லனாக ஒருவர். அவர் ராஜ தகுதி படைத்த நெசவாளருக்கு வேண்டியவர் .
இப்படியான பிளாட்டை வைத்து அதற்கேற்ப காட்சிகளை கோர்த்து படமெடுத்தால் அள்ள முடியாதா? மகனின் கல்யாணத்தன்றே அப்பாவுக்கு பிள்ளை பிறக்கிறது என்றால் வித்தியாசமா இல்லையா,? யாராவது இதற்கு முன்னர் சொல்லியிருக்கிறார்களா ?
சரிய்யா ,இந்த வித்தியாசம் எந்த அளவுக்கு கதைக்கு பயனாகிறது?
ஒரு கட்டத்தில் எல்லாமே கிறுக்குத்தனமாக தெரிகிறது.
இளையோரின் ரசனைக்கேற்ப கல்லூரி கலாட்டாக்கள் ,ஆட்ட பாட்டம் என தொடங்குகிறது கதை.
சிவகுமாராக வருபவர் ஆதி. தலையை புல்வெளியாக வைத்திருக்கிற, நவீன நாகரீகத்தின் குடிமகன். துள்ளல் நடிப்பில் இருக்கிறது.படம் முழுக்க!
இவரது கதாநாயகியாக மாதுரி.கோடிட்ட இடங்களை நிரப்புகிறார்.!
தளர்ச்சி ஏற்படுகிறபோது பீம புஷ்டி அல்வா ஆதித்யா கதிர். மாடுலேஷன் சூப்பர்.! பிராங்ஸ்டர் ராகுலும் இருக்கிறார்.
சந்திரசேகராக விஜய் கார்த்திக்.ஒயிட் அண்ட் ஒயிட் வில்லன். யாரையோ இமிடேட் பண்ண துடிப்பது தெரிகிறது..தாத்தாவாக வருகிறவரை மறக்க முடியாது. உச்சரிப்பு கம்பீரம். தனித்து நிற்பதற்கு முயன்று அது முடியாமல் போனதைப்போல சில காட்சிகளில் நடிக்கிறார்.
பாடல்கள் கருத்துடன் ,செவிகளை நிரப்புகிற இனிமையுடன் இருக்கின்றன.
சிவகுமாரின் சபதமா அல்லது நோஞ்சானின் சபதமா?