சென்னை, வியாசர்பாடியில் போலீசிடம் உரிய அனுமதி பெறாமல் நடத்திய கவுதம் கார்த்திக்கின் படபிடிப்புக்கு போலீசார் இன்று தடை விதித்தனர். இதையடுத்து போலீசாருக்கும் படபிடிப்பு குழுவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் தற்போது பாக்ஸ் ஸ்டார் பட நிறுவனத்தின் தயாரிப்பில் , ராஜ்குமார் பெரியசாமிஇயக்கத்தில்,’ரங்கூன் ”என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது. படப்பிடிப்பை பார்க்கும் ஆவலில்.அவ்வீட்டைச் சுற்றி பெரும் கூடம் கூடியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து படப்பிடிப்பு குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறினர். இதுதொடர்பாக போலீசாருக்கும், படக்குழுவினருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என படப்பிடிப்பிற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால், வேறு வழியின்றி படிப்பிடிப்பை ரத்து செய்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.