நெஞ்சுக்கு நீதி. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எழுதிய கழக வரலாறுதான் நினைவுக்கு வரும். அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிற படத்தின் பெயரும் அதுதான் என்கிறபோது “இது கழகத்தின் வரலாறு சொல்லுகிற படமாக இருக்குமோ” என்கிற எண்ணம் ஏற்படாமல் இருக்காது.
ஆனால் கழகம் எதற்காக பாடுபடுகிறதோ அதன் தொடர்பான கதைதான் என்பது மோஷன் போஸ்டரை பார்த்தபின் தெரிந்து விடுகிறது.
“சாதிகள் தொல்லையடி பாப்பா ! அதில் கருணைக்கொலைகளும் அடங்குதடி பாப்பா”என்று பாடவும் தோன்றுகிறது.
இந்தி மொழியில் வெளியான ‘ஆர்டிகிள் 15 ‘என்கிற படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி.!
ஜீ ஸ்டுடியோஸ்சும் பே வ்யூ ப்ராஜெக்ட்ஸ்சுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அருண் ராஜா காமராஜ் இயக்கம்.
போனி கபூர் வழங்கும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.நடிக்கிறார்.
ஆரி ,தான்யா ராஜேந்திரன் ,ஷிவானி ராஜசேகர் ,யாமினி சந்திரசேகர் ,சுரேஷ் சக்கரவர்த்தி ,இளவரசன் ,மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
“பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்”என்கிற முதுமொழியை அடித்தளமாக கொண்டிருக்கிற கதை.
இரவு நேரம்.இருளை கிழித்துக்கொண்டு சைரனுடன் காட்டுப்பகுதியை கடந்து செல்கிற போலீஸ் வேன் . மரக்கிளையில் ஆண் ,பெண் உடல் கயிற்றில் தொங்குகிறது. வேடிக்கை பார்க்கிற கூட்டம் .எல்லாமே ஸிலவுட்டில்!
அண்ணல் அம்பேத்கார் சிலையும் ஸிலவுட்டில் !
சாதிய கொடுமைகளை சொல்லப்போகிற படம் என்பது தெரிகிறது.
சட்டப்பேரவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உதயநிதி நடித்திருக்கிற படம்.
தாத்தா கலைஞர் இருந்திருந்தால் வசன மேற்பார்வை அவராக இருந்திருக்கக்கூடும்.!
எதிர்பார்ப்பினை இப்போதே ஏற்படுத்தியிருக்கிறது நெஞ்சுக்கு நீதி.!