இன்னும் 13 நாளே இருக்கிறது பணத்தை பஸ்பமாக்குவதற்கு!! அதாவது வெடிகள் கொளுத்தப் பட்டு காற்று மாசு படுவதற்கு ! தீபாவளி கொண்டாட்டம்.!!
விடுமுறை காலம் தொடர்வதால் பொழுது போக்கு மய்யங்கள் நிரம்பி வழியும். திரைப்பட அரங்குகள் டிக்கெட் கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி லாபம் அடைகிற விழாக்களில் தீபாவளியும் ஒன்று.!
நவம்பர் 4 ஆம் தேதியில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த வெளியாகிறது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது.
ரஜினி படம் என்பதால் கூடுதலான தியேட்டர்கள் கிடைத்து விடும். 100க்கு 100 தியேட்டர்களை கொடுத்தாலும் சம்மதமே என்பார்கள் தியேட்டர் அதிபர்கள்.!
ஆனால் வேண்டாம் என தயாரிப்பாளர்களே ஒதுக்கிவிடுகிற சில ஏரியாவும் இல்லாமல் இல்லை. இத்தகைய ஏரியாக்கள்தான் மற்ற படங்களுக்கு கிடைக்கும்.!இதனால் சில படங்கள் 4 ஆம் தேதி வரவில்லை.வேறு தேதிகளை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் தீபாவளியன்று வருவதாக விஷாலின் ‘எனிமி ‘படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
“ஓடிடி தளத்தில் எங்கள் எனிமி படத்தை வெளியிட நல்ல வாய்ப்பு இருந்தபோதும் திரையரங்குகளில்தான் படத்தை வெளியிடவேண்டும் என்கிற உறுதி எடுத்தோம். அதன்படி நவம்பர் 4 தீபாவளி நாளில் திரைக்கு வரவிருக்கிறோம். ஆனால் எங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்கிற சூழல் இருப்பதாக அறிகிறேன்.
இதனால், நான் சார்ந்திருக்கும் சங்கம் சார்பானவர்கள் எங்களுக்கு 250 திரையரங்குகள் கிடைக்க உதவவேண்டும். தீபாவளி போன்றதொரு பெரிய பண்டிகையின்போது இரண்டு படங்கள் வந்தாலும் இரண்டும் இலாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் 900 திரையரங்குகளில் திரையிட்டால் இரண்டாவது நாளே கூட்டம் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம்.”என சொல்லியிருக்கிறார்.
யாரை சொல்லுகிறார் என்பது தெரியவில்லை. பஞ்சாயத்தை கூட்டுவாங்க போலிருக்கு!