நடிகர் ரஜினிகாந்துக்கு திரை உலகின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’விருது கடந்த சில மாதங்களுக்கு முன் மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை நாளை டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஜினிகாந்துக்கு வழங்குகிறார்.
இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது, ’மிக உயரிய இந்த விருதைப் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. இந்த உயரிய விருதை பெறும் நேரத்தில் என்னுடைய ஆசான் கே பாலச்சந்தர் இல்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
டெல்லி சென்று விருதை வாங்கிவிட்டு சென்னை திரும்பியவுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரஜினிகாந்த் தனது மகள் புதிய தொழில் தொடங்க உள்ளது குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
“நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
ஒன்று, மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது. இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ‘HOOTE’ என்கிற ஆப்பை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார்.
அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே, எந்த மொழியிலும் ‘hoote app’ மூலமாக பதிவிடலாம் இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான app பை என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.’